

காங்கிரஸின் அலட்சியத்தால் பிரதமர் மோடி பலம் பெறுவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சமீபத்தில் இதேபோன்ற கருத்தை தேர்தல் பிரச்சாரக நிபுணரான பிரஷாந்த் கிஷோரும் தெரிவித்திருந்தார்.
அடுத்த வருடம் துவக்கத்தில் கோவாவின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் 40 தொகுதிகளிலும் போட்டியிட மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.
இதற்கான பிரச்சாரத்தை துவக்கி வைக்க மூன்று நாள் பயணமாக முதல்வர் மம்தா கோவா வந்திருந்தார். தனது இறுதி நாள் பயணமான இன்று அவர் செய்தியாளர்களிடம பேசினார்.
அப்போது முதல்வர் மம்தா கூறும்போது, ‘அரசியலில் காங்கிரஸ் காட்டும் அலட்சியத்தால் பிரதமர் நரேந்தர மோடி பலம் பெறுகிறார். பாஜகவை எதிர்க்க அக்கட்சி எந்த தீவிரமான முடிவையும் எடுப்பதில்லை.
காங்கிரஸின் காரணமாக நாடு முழுவதிலுமான மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இது எனது கட்சியல்ல் என்பதால் அதை பற்றி பேசுவது எனது பிரச்சனையல்ல.
நான் தனியாக பிராந்தியக் கட்சி துவங்கி நடத்தி வருகிறேன். மேற்கு வங்க தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் நல்வாய்ப்பை விடுத்து காங்கிரஸ் எனது கட்சியை எதிர்த்தது.
பிராந்தியக் கட்சிகள் வலுப்பெற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நமது நாடு கூட்டமைப்பில் பலம் பெற வேண்டும். மாநிலங்களில் பலமே மத்திய அரசின் பலமாக இருக்கும்.
டெல்லியில் இருந்தபடி ஆளும் மத்திய அரசு மாநிலங்களை மிரட்டுவது இனி செல்லாது. எக்காரணைத்தை கொண்டும் இனி
நான் பாஜகவிடம் தலை வணங்க மாட்டேன்.’ எனத் தெரிவித்தார்.
இதுபோல் பாஜக மற்றும் பிரதமர் மோடி மீதானக் கருத்து இரண்டாவதாக வெளியாகி உள்ளது. இதேபோன்ற ஒரு கருத்தை கடந்த வாரம் பிரஷாந்த் கிஷோர் கூறியிருந்தார்.
கோவா சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரஷாந்த் கிஷோர் தேர்தல் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் மேற்கு வங்க மாநில தேர்தலிலும் பிரச்சார வியூகம் அமைத்தை மம்தாவை மீண்டும் முதல்வராக்கினார்.