

காங்கிரஸால் தான் பிரதமர் மோடி இன்னும் பலமாகப் போகிறார், ஏனென்றால் பாஜகவின் டிஆர்பி எனப்படும் தொலைக்காட்சி ரேட்டிங் புள்ளிகள் ஏறுவதே காங்கிரஸால் தான் என மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவா சட்டப் பேரவைக்கு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் சில இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போன காங்கிரஸ் கட்சி, இம்முறை தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அதேசமயம் அங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.
இந்தநிலையில் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பனாஜி வந்துள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸால் தான் பிரதமர் மோடி இன்னும் பலமாகப் போகிறார். ஏனென்றால் பாஜகவின் டிஆர்பி எனப்படும் தொலைக்காட்சி ரேட்டிங் புள்ளிகள் தான் காங்கிரஸ். அந்த கட்சி சரியான முடிவெடுக்க முடியாவிட்டால் நாடு பாதிக்கப்படும். நாடு ஏன் இந்த பாதிப்படைய வேண்டும். காங்கிரஸுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன. இனிமேலும் தேசம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காது.
காங்கிரஸைப் பற்றி நான் பேசப்போவதில்லை, ஏனென்றால் அது என்னுடைய கட்சி அல்ல. நாடுதழுவிய அளவில் பெரிய சக்தியில்லாத ஒரு மாநில கட்சி தான் என்னுடையது. மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது. வேறு எந்த கட்சியையும் பற்றி பேச விரும்பவில்லை.
மேற்குவங்க தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடுவதற்குப் பதிலாக காங்கிரஸ் என்னை எதிர்த்துப் போட்டியிட்டது. நீங்கள் காங்கிரஸை எதிர்த்து போட்டிகிறீர்களே என கேட்கிறீர்கள். அவர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிட்டார்கள். இங்கு கோவாவில் கூட அவர்கள் எங்களை எதிர்த்துப் போட்டிகிடுகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தா பாராட்ட முடியும். நாங்கள் மாநில கட்சிகளை இணைத்து செயலாற்ற விரும்புகிறோம். இதன் பிறகு மத்தியிலும் நாங்கள் வலிமையாவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.