

துணிச்சலும், கனிவான உள்ளமும் கொண்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று அரசியல் விழா நடைபெற்றது.
பசும்பொன்னில் இன்று தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்தக்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்கிறேன். மிக உயர்ந்த துணிச்சலும், கனிவான உள்ளமும் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பணியாற்றியவர்’’ எனக் கூறியுள்ளார்.