Published : 30 Oct 2021 03:12 AM
Last Updated : 30 Oct 2021 03:12 AM

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரோம் நகருக்கு சென்றார் பிரதமர் மோடி: வாடிகனில் போப் பிரான்சிஸை சந்திக்க திட்டம்

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இத்தாலி வந்தடைந்தார். ரோம் நகரில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற் பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி சென்றுள்ளார். வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்து பேசவும் மோடி திட்டமிட்டுள்ளார்.

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் 16-வது ஜி20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று இத்தாலி புறப்பட்டுச் சென்றார். ரோம் நகர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலி அரசின் மூத்த அதிகாரிகள், இத்தாலிக்கான இந்தியதூதர் நீனா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர்.

ரோம் நகரை அடைந்த பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘இத்தாலியின் ரோம் நகரை வந்தடைந்துள்ளேன். உலகப் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கும் முக்கிய மேடையாக ஜி20 உச்சி மாநாடு உள்ளது. உலகின்பொருளாதார வளர்ச்சி, கரோனாவைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருதல், பருவநிலை மாற்றம் ஆகியவை தொடர்பாக ஜி20 உச்சி மாநாட்டில் தலைவர்களுடன் விவாதிப்பேன்’ என குறிப்பிட்டுள்ளார். அத்துடன்ரோம் விமான நிலையத்தில்இறங்கிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, முதல்முறையாக வாடிகனுக்கு சென்று போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

பிரதமரின் பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இத்தாலி தலைமையின் கீழ்நடக்கவுள்ள ஜி20 மாநாட்டில் கரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும். ஜி20 மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

அதன்பின், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு செல்லும் மோடி, அங்கு நவ.1, 2 ஆகிய தேதிகளில் நடக்கும் பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்கிறார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் சந்திக்க உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x