

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப் பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புத் தொகையாக 2021-22-ம் நிதி ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறை, பொருளா தார தேக்கம் உள்ளிட்ட கார ணங்களால் ரூ.1.59 லட்சம் கோடி இழப்பீட்டுத் தொகையை அளிப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தத் தொகையை வெளிச்சந்தையில் கடனாக மாநிலங்கள் திரட்டிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
ஆனால் மாநில அரசுகள் அவ்விதம் திரட்ட முடியாது எனகூறிவிட்டன. இதனால் மத்திய அரசே கடனை திரட்டி மாநிலங்களுக்கு கடைசி தவணையாக ரூ.44 ஆயிரம் கோடியை நேற்று அளித்துள்ளது.
முந்தைய தவணைத் தொகை யாக ரூ.40 ஆயிரம் கோடியை அக்டோபர் 7-ம் தேதி மத்திய அரசு விடுவித்தது. தற்போது கடைசி தவணையையும் விடுவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ரூ.75 ஆயிரம் கோடியை கடந்த ஜூலை 15-ம் தேதி மத்திய அரசு விடுவித்ததாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
மத்திய அரசுக்காக ரிசர்வ் வங்கி இந்த கடன்தொகையை திரட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்காக ஒருங்கிணைந்த வகையில் கடன் திரட்டப்பட்டது. இந்த கடன் தொகைக்கான வட்டி மற்றும் அசல் தொகை ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி நிதியத்துக்கு செலுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.