

நெடுஞ்சாலைகள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிப்பது சாத்தியமல்ல என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை யில் நேற்று இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
விவசாய நிலங்களின் வழியாக கெயில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு’ மத்திய அரசுக்கு கடந்த 2012-ம் ஆண்டு மனு அளித்துள்ளது. எரிவாயு குழாய்கள் பதிக்கப்படும் பணி முடிந்ததும் நிலங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
பெட்ரோலியம், கனிம வளங்கள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்பவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும் நிலத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதமும், ஆறுதல் தொகையாக 30 சதவீதமும் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படும்.
எரிவாயு குழாய்கள் பதிக்கப் பட்ட நிலங்களில் வழக்கம்போல விவசாயப் பணிகளை மேற் கொள்ளலாம். ஆனால், நிரந்தரக் கட்டிடம் கட்டவும், ஆழமாக வேர் விடக் கூடிய பயிர்களை பயிரிடவும் அனுமதிக்கப்பட மாட்டாது.
பாதுகாப்பு காரணங்களுக் காகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும் நெடுஞ்சாலைகள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிப்பது சாத்தியமல்ல.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.