

வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது திட்டமிட்ட சதி. சிறுபான்மையினரை வேருடன் அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது இந்துக்கள் மீதும், கோயில்கள், சிலைகள் மீதும் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டதால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 5-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய அரசுத் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது, மதச்சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி, வங்கதேச அரசிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து வங்கதேசத்தில் உள்ள மதச்சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசினா உறுதியளித்தார்.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய காரியகாரி மண்டல் பைதக் கூட்டம் கர்நாடகாவில் தார்வாட்டில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானம் குறித்து இணைப் பொதுச்செயலாளர் அருண் குமார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
இது தொடர்பாக அருண் குமார் கூறியதாவது:
“வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களை வேருடன் அகற்றப் போடப்பட்ட திட்டமிட்ட சதிச் செயல். அண்டை நாடான வங்கதேசத்தை அழைத்து இந்திய அரசு தனது கண்டனத்தையும், உலக அளவில் இருக்கும் இந்து சமூகத்தின் கவலையையும், வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்க வேண்டும்.
இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனையை வங்கதேச அரசு வழங்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்தத் தாக்குதலின் நோக்கமே வங்கதேசத்தில் பொய்யான செய்தியைப் பரப்பி இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்குவதுதான்.
மத்திய அரசு அனைத்து ராஜாங்க ரீதியான வழிகளிலும் வங்கதேசத்துடன் தொடர்பு கொண்டு இந்துக்கள், பவுத்தர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை, உலக மனித உரிமை அமைப்புகள், இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்காமல், மவுனம் கலைத்து இந்தத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்.
வங்கத்தில் உள்ள மதச் சிறுபான்மையினர்களான இந்துக்கள், பவுத்தர்கள் உள்ளிட்டோர் கவுரவத்துடனும், அமைதியுடன் வாழ்வதற்கு உதவ வேண்டும்''.
இவ்வாறு அருண் குமார் தெரிவித்தார்.