Published : 29 Oct 2021 03:40 PM
Last Updated : 29 Oct 2021 03:40 PM

என்னை இந்து விரோதி எனக் கூறுவதற்கு பாஜகவுக்குத் தகுதியில்லை: மம்தா பானர்ஜி சாடல்

பானாஜியில் நடந்த நிகழ்ச்சியில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸுடன் முதல்வர் மம்தா பான்ஜி பேசிய காட்சி | படம்: ஏஎன்ஐ.

பானாஜி

என்னை இந்து விரோதி எனக் கூறுவதற்கு பாஜகவுக்குத் தகுதியில்லை. எங்கள் கட்சிப் பெயரிலேயே (TMC) கோயில் (Temple), மசூதி (Mosque), தேவாலயம் (Chruch) இருக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கோவாவில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என ஏற்கெனவே மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தச் சூழலில் கோவாவில் பல்வேறு தரப்பினரையும் கட்சியில் இணைக்கும் வகையில் 2 நாட்கள் பயணமாக மம்தா பானர்ஜி அங்கு சென்றுள்ளார்.

பானாஜி நகரில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முன்னிலையில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகைகள் நபிஷா அலி , மிர்னாலினி தேஷ்பிரபு ஆகியோர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

''கோவாவில் அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் போட்டியிடவே நாங்கள் இங்கு வந்துள்ளோம், வாக்குகளைப் பிரிப்பதற்காக அல்ல. கடற்கரை மாநிலமான கோவா வலிமையானது, சுயமாகத் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக் கூடியது. டெல்லியில் இருப்பவர்களால் இந்த மாநிலம் ஆளப்படாது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் மக்களை மதத்தால் பிரிக்காது. ஏனென்றால் எங்கள் கட்சியின் பெயரிலேயே (TMC) கோயில் (Temple), மசூதி (Mosque), தேவாலயம் (Chruch) இருக்கிறது.

என்னுடைய பதாகைகள், சுவரொட்டிகளில் எல்லாம் பாஜகவினர் என் முகத்தை மறைத்துள்ளார்கள். ஆனால், நிச்சயம் இந்திய மக்கள் ஒருநாள் பாஜகவை அழிப்பார்கள். நான் கோவாவுக்கு வந்தபோது, என் முகம் மறைக்கப்பட்ட சுவரொட்டிகளால்தான் வரவேற்கப்பட்டேன். எங்களுக்குக் கறுப்புக் கொடி காட்டலாம், அனுமதி தர மறுக்கலாம். ஆனால், பாஜகவினருக்குத் தெரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது.

கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பழிவாங்குதல் எண்ணத்தோடு பணியாற்றாமல் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவேன். மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக நான் செய்த திட்டங்களை கோவாவில் கொண்டுவருவோம். இதை கோவாவுக்கு மகிழ்ச்சியுடன் செய்வேன்.

நான் கோவாவுக்கு முதல்வராக வரவில்லை. இங்கு அரசு நிர்வாகத்தில் ஊழலில்லை, கொள்கை இருக்கிறது, செயல்முறை இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேசியக் கட்சி என்பதால் எங்கும் போட்டியிடும்.

கோவாவை வலிமையாக மாற்ற நாங்கள் பணியாற்றுவோம். அனைத்துக் கட்சிகளுக்கும் இங்குள்ள மக்கள் வாய்ப்பளித்துள்ளார்கள். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு கொடுங்கள். பாஜகவினர் என்னை இந்து விரோதி என்று அழைக்கிறார்கள். என்னுடைய குணத்துக்கு அவர்கள் சான்று அளிக்கத் தகுதியில்லை. முதலில் அவர்கள் யார் என்பதற்குச் சான்று பெறட்டும்.

எனக்கு இந்த தேசத்தைப் பற்றி நன்கு தெரியும். எங்களை நம்பினால், எங்கள் கட்சி முழுமையாக உங்களுக்கு ஆதரவு அளிக்கும். கோவாவை டெல்லியில் இருந்தவாறே ஆள விடமாட்டோம். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் கோவாவில் பாஜக ஆட்சி அமைக்க மக்கள் அனுமதித்தார்கள். ஆனால், அந்தத் தவறை இந்த முறை செய்யாதீர்கள். இந்த மாநிலத்துக்கு உழைக்க திரிணமூல் காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஆனால், பாஜகவுடன் சமரசம் செய்யமாட்டேன்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x