

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகைகள் நபிஷா அலி, மிர்னாலினி தேஷ்பிரபு ஆகியோர் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தனர்.
கோவா மாநிலத்தில் 2022-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சென்றுள்ளார். அப்போது மம்தா முன்னிலையில் இவர்கள் மூவரும் கட்சியில் இணைந்தனர்.
கோவாவில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என ஏற்கெனவே மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்தச் சூழலில் கோவாவில் பல்வேறு தரப்பினரையும் கட்சியில் இணைக்கும் வகையில் 2 நாட்கள் பயணமாக மம்தா பானர்ஜி அங்கு சென்றுள்ளார்.
பானாஜி நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து முதல்வர் மம்தா வரவேற்றார்.
அப்போது லியாண்டர் பயஸ் நிருபர்களிடம் கூறுகையில், “நான் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். இனிமேல் அரசியல் எனும் வாகனத்தில் ஏறி மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறேன். உண்மையில் தீதிதான் உண்மையான சாம்பியன்”எனத் தெரிவித்தார்.
மேலும், பாலிவுட் நடிகைகள் நபிஷா அலி, மிர்னாலினி தேஷ்பிரபு இருவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கோவா திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நடிகைகள் நபிஷா அலி, மிர்னாலினி இருவரும் எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி முன்னிலையில் சேர்ந்துள்ளனர். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவாவில் இன்று மம்தா பானர்ஜி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிற்பகல் 3.30 மணிக்கு மங்கேஷி கோயிலுக்கு மம்தா பானர்ஜி செல்ல உள்ளார். மாலை 4 மணிக்கு மர்தோலில் உள்ள நாராயணி கோயிலுக்கும், 4.30 மணிக்கு தபோபூமி கோயிலுக்கும் மம்தா செல்ல உள்ளார்.