

பல்வேறு மாநிலங்களில் நாளை (அக்டோபர் 30) நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பிஹார் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத் தலைவர்களான நிதிஷ்குமார், தேஜஸ்வி பிரசாத் யாதவ், கன்னய்யா குமார் மற்றும் சிராக் பாஸ்வானின் அரசியல் செல்வாக்கு முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் 2 எம்எல்ஏக்கள் மறைவால் அவர்களது தொகுதிகளான தாராபூர் மற்றும் குஷேஸ்வர்ஸ்தானுக்கு இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில், கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் செல்வாக்கு உயரும் எனக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே இந்தத் தொகுதிகள் ஜேடியு வசம் இருந்ததால் அவருக்கு இடைத்தேர்தலில் ஏற்படும் தோல்வி, எதிர்கால அரசியலில் பாதிப்பை உருவாக்கும் சூழல் உள்ளது. இதனால், நிதிஷ் நேரடியாகப் பிரச்சாரக் களத்தில் இறங்கினார். இவரது முக்கியக் கூட்டணியான பாஜகவிற்கும் இந்த இடைத்தேர்தல் கவுரவப் பிரச்சினையாகி விட்டது.
பிஹாரின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி, இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது செல்வாக்கை மேலும் உயர்த்த விரும்புகிறார். முன்னாள் முதல்வரான அவர் தனது சொந்த முடிவில் இரண்டு தொகுதிகளிலும் தன் கட்சியின் வேட்பாளர்களையே போட்டியிட வைத்துவிட்டார். இதற்காக முதன்முறையாக இடைத்தேர்தலில் தனது தந்தையான லாலுவின் பிரச்சாரக் கூட்டத்தையும் தேஜஸ்வி நடத்தி இருந்தார்.
இதனால், கடும்கோபம் கொண்ட காங்கிரஸ், தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணியிலிருந்து வெளியேறியது. ஏனெனில், தேஜஸ்வி பிரசாத்தின் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தன. 2015-ல் தனது தொகுதியாக இருந்த தாராபூரில், முன்னதாக 2000-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸே போட்டியிட்டிருந்தது.
இதற்கிடையே, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரான கன்னய்யா குமாரை பிரச்சாரத்தில் இறக்கியது காங்கிரஸ். இதன்மூலம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்த கன்னய்யாவிற்கு பிஹாரில் உள்ள செல்வாக்கு தெரிந்துவிடும் எனக் கருதப்படுகிறது. இவருடன் குஜராத் காங்கிரஸின் இளம் தலைவர்களான ஜிக்னேஷ் மேவானி மற்றும் ஹர்திக் பட்டேல் ஆகியோரும் பிரச்சாரம் செய்தனர்.
இப்போட்டியில், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனான சிராக் பாஸ்வானும் இடம் பெற்றுள்ளார். இவர், நிதிஷ்குமாரை எதிர்த்துக் கடந்த வருடம் கூட்டணியிலிருந்து வெளியேறியவர். சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டவருக்கு, ஒரு எம்எல்ஏ மட்டும் கிடைத்தார்.
இதன் காரணமாக அவரது லோக் ஜன சக்தி இரண்டானது. மத்தியத் தேர்தல் ஆணையத்தில் அதன் வழக்கு நடைபெறும் நிலையில் தனது செல்வாக்கைத் தக்க வைக்க, இடைத்தேர்தலின் முடிவு சிராக்கிற்கும் முக்கியமாகி விட்டது.
எனினும், இவரால், நிதிஷ் மற்றும் லாலு கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் சூழலே நிலவுகிறது. இதில் காங்கிரஸும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, லாலு மற்றும் நிதிஷ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.