பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 பேர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு: உ.பி. போலீஸார் நடவடிக்கை

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் | கோப்புப்படம்
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் | கோப்புப்படம்
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் மிலாது நபி பண்டிகையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 பேர் மீது தேசதுரோக வழக்கை போலீஸார் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இந்த 3 பேரும் சமூக வலைதளத்தில் கடந்த 20-ம் தேதி நடந்த மிலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடும் வீடியோக்களைப் பதிவிட்டதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டார்கள் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முகமது ஜாபர், சமீர் அலி, அலி ராஜா ஆகியோர் மீது நொய்டாவில் உள்ள செக்டார் 20 போலீஸ் நிலைய போலீஸார் தேசதுரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் முதலில் ஐபிசி 153ஏ பிரிவிலும் பின்னர் 124 ஏ பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் தேசதுரோக வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியின்போது பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் மீதும் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 3 மாணவர்களும் ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த இரு நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், “ பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுபவர்கள் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in