

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10, 2021 ஆம் தேதியுடன் அவரின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் 3 ஆண்டுகளுக்கோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரைக்கோ சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி கவர்னராக செயல்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருந்த முக்கிய அதிகாரி சக்திகாந்த தாஸ் என்று அறியப்பட்டவர். முன்னாள் பொருளாதார விவாகரத்துறைச் செயலரும் கூட. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார்.
ஏற்கெனவே 2016-ம் ஆண்டு செப்டம்பரில் ரகுராம்ராஜன் ஓய்வு நேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக அடுத்து பரிசீலிக்கப்பட்ட பெயர்களில் உர்ஜித் பட்டேலுடன் சக்தி காந்ததாஸின் பெயரும் ஒன்று. ஆனால் அந்த நேரத்தில் அவர் பெயர் பரிசீலிக்கப்படாமல் உர்ஜித் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் 2017 மே மாதம் சக்திகாந்த தாஸ் ஓய்வுப்பெற்றார். இந்நிலையில் உர்ஜித் பட்டேல் திடீர் விலகலை அடுத்து சக்தி காந்ததாஸ் ரிசர்வ் வங்கி கவர்னராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது பதவிக்காலம் தற்போது மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.