Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்: எந்த சமூகத்தினருக்கும் எதிரான உத்தரவு அல்ல என உச்ச நீதிமன்றம் விளக்கம்

புதுடெல்லி

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களின் போது பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகவும், பல தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் இந்த பட்டாசுகளில் சேர்க்கப்படுவதால் மனிதர்களுக்கு இது பெரும் ஆபத்தை விளைவிப்பதாகவும் கூறி கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்தஉச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத ரசாயனங்களைக் கொண்ட பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு நாட்டில் எந்தப் பகுதியிலும் பின்பற்றப்படவில்லை. இந்த உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சில மாதங்களுக்கு முன்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதில் சிபிஐ கடந்த மாதம் சமர்ப்பித்த அறிக்கையில், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் அடங்கிய பட்டாசுகள் பெருமளவில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடை பெற்றது. அப்போது அனைத்து வாதங்களையும் கேட்ட ் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

கொண்டாட்டம் என்ற பெயரில், பட்டாசு உற்பத்தியாளர்கள் நாட்டுமக்களின் உயிருடன் விளையாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தடை செய்யப்பட்ட ரசாயனங்களை பயன்படுத்தி செய்யப்படும் பட்டாசுகள், சுற்றுச்சூழல் மட்டுமின்றி மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன.

இதனைக் கருத்தில்கொண்டே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. நாட்டு மக்களின் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை, வேலைவாய்ப்பு என்ற காரணத்தை காட்டி எங்களால் பறிக்க முடியாது.

இப்போது கூட அனைத்து பட்டாசுகளுக்கும் நாங்கள் தடை விதிக்கவில்லை. விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் பசுமைபட்டாசுகளை தாராளமாக விற்பனை செய்துக் கொள்ளலாம். அதேபோல, உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டும் பட்டாசுகளை விற்க வேண்டும். ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை விற்கக் கூடாது. இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாடுமுழுவதும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.

பட்டாசுகள் மீது தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உச்ச நீதிமன்றம் எதிரானது என்பது போல சித்தரிக்கப்படுகிறது. இது உண்மை அல்ல. இந்த தடை உத்தரவானது, நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே பிறப்பிக்கப்படுகிறது. நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவே நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

முன்னதாக, தடை செய்யப்பட்ட ரசாயனங்களில் பட்டாசு தயாரித்த 6 பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அந்த நிறுவனங்கள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x