

கர்நாடகாவில் கடந்த இரு வாரங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மண்டியா மாவட்டம் ரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று முன் தினம் அணை முழு கொள்ளளவை எட்டியது.
நேற்று மாலை நிலவரப்படி, 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.52 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 18,650 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 10,330 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சமர்ப்பண பூஜை செய்வதாக இருந்த நிகழ்ச்சி நவம்பர் 2-ம் தேதி நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியுள்ளதால் மண்டியா, ராம்நகர் மாவட்டங்களில் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்படும் நீரின் அளவு (10 ஆயிரம் கன அடி) அடுத்த சில தினங்களில் இன்னும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.