

நர்மதா அணையின் நீர்மட்டத்தை 138.68 மீட்டராக உயர்த்துவதற்கு நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்பின் தலைவர் மேதா பட்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நர்மதா அணை கட்டுப்பாட்டு ஆணையக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அணையின் உயரத்தை 121.92 மீட்டர் என்பதி லிருந்து 138.68 மீட்டராக உயர்த்திக்கொள்ள, அதை நிர்வகித்துவரும் சர்தார் சரோவர் நர்மதா நிகம் நிறுவனத்திற்கு அனுமதியளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜுனாகத் பகுதி யில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த குஜராத் முதல்வர் ஆனந்திபென், செய்தியாளர்க ளிடம் கூறுகையில், “சர்தார் சரோவர் நர்மதா அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அணையின் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மேதா பட்கர் கண்டனம்
நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்பின் தலைவர் மேதாபட்கர் கூறியதாவது: “அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் முடிவு, ஜனநாயக விரோதமானது. நீர்மட்டத்தை உயர்த்துவதால் 2.5 லட்சம் மக்கள் வசித்துவரும் ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும்.
அவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து செல்ல நேரிடும் என்ற உண்மையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த முடிவை எடுத்துள்ளனர். இது தொடர்பாக எங்களின் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்றார்.