Published : 28 Oct 2021 01:42 PM
Last Updated : 28 Oct 2021 01:42 PM

4 ஆண்டுகளில் பட்டப் படிப்புடன் பி.எட். பட்டம்: நுழைவுத் தேர்வுடன் மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிமுகம்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி 

4 ஆண்டுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு, பி.எட். படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை (ஐடிஇபி) மத்திய கல்வித்துறை அமைச்சகம் அடுத்த கல்வியாண்டு (2022-23) முதல் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு அவசியம்.

அதாவது பிஏ-பி.எட், பிஎஸ்சி-பி.எட், பி.காம்-பி.எட் ஆகிய இரு பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் முடித்து மாணவர்கள் வெளியேறலாம். தற்போது இளநிலைப் பட்டப் படிப்புக்கு 3 ஆண்டுகள், பி.எட். படிப்புக்கு 2 ஆண்டுகள் என 5 ஆண்டுகள் ஆகின்றன. இதில் 4 ஆண்டுகள் மட்டுமே தேவைப்படும். ஓராண்டு காலம் சேமிக்கப்படும்.

நாடு முழுவதும் அடுத்த கல்வியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கல்வி நிலையங்களில் மட்டும் இந்தப் படிப்பு தொடங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையின்படி, வரும் 2030-ம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் மூலமே ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் இந்தப் புதிய படிப்புக்கான பாடங்களை வகுத்துள்ளது. இதன்படி, வரலாறு, கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம், வணிகவியல் ஆகியவற்றில் ஒரு மாணவர் பட்டம் பெறவும், ஆசிரியர் கல்வியில் பட்டம் பெறவும் முடியும்.

ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் என்பது நவீன கற்பித்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான தொடக்க நிலை, அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணியல், முழுமையான கல்வி முறை மற்றும் இந்தியா மற்றும் அதன் உயர்ந்த பாரம்பரிய மதிப்புகள், நெறிமுறைகள், கலை, மரபுகள் உள்ளிட்டவற்றைப் புரிந்துகொள்ள அடித்தளத்தை வகுக்கும்.

இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் 2022-23ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். தேசியத் தேர்வு முகமை மூலம் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். பள்ளி ஆசிரியர்களுக்கான குறைந்தபட்சப் பட்டப் படிப்பு தகுதியாக மாறும். நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்துறைக் கல்வி நிறுவனங்களில் இந்தத் திட்டம் அறிமுகமாகும்.

ஒட்டுமொத்த ஆசிரியர் கல்விப் பிரிவையே இந்தத் திட்டம் புத்துணர்ச்சி ஊட்டக்கூடியதாக மாற்றும், பங்களிப்பு செய்யும். இந்தப் பாடத்திட்டத்தில் படித்து வெளியேறும் ஆசிரியர்கள் பன்முகச் சூழலில், தேசத்தின் மதிப்புகள், பாரம்பரியங்களை அறிந்து 21-ம் நூற்றாண்டுக்குத் தேவையானவற்றை உலகத் தரத்தில் வழங்குவார்கள். புதிய இந்தியாவை வடிவமைப்பதில் இவர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x