மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு 2-வது முறையாக கரோனா தொற்று

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் | கோப்புப் படம்.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் | கோப்புப் படம்.
Updated on
1 min read

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டீல் இந்த ஆண்டில் 2-வது முறையாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இரு தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையிலும் அவர் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

இந்தியாவில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16,156 பேர் பாதிக்கப்பட்டனர். கரோனாவிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 95 பேர் குணமடைந்துள்ளனர். ஏறக்குறைய நோய்த் தொற்றிலிருந்து 98 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர்.

இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும் தளர்த்தியுள்ளது. பல்வேறு மாநிலங்களும் தளர்த்தியுள்ளன. இருப்பினும் அடுத்துவரும் பண்டிகைக் காலத்தை மனதில் வைத்து மக்கள் கரோனா தடுப்புப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் போன்றவற்றைச் செய்வது கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வழியாகும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,485 பேர் பாதிக்கப்பட்டனர். 38 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் கரோனா பாதிப்பு 66.6 லட்சமாகவும், உயிரிழப்பு 1.40 லட்சமாகவும் இருக்கிறது.

மகாராஷ்டிாவில் தற்போது 19,480 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 1.72 லட்சம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 933 பேர் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த ஓராண்டுக்கு முன் அதாவது கடந்த அக்டோபர் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்ட என்சிபி கட்சியின் மூத்த தலைவர் திலிப் வல்சே பாட்டீல் 2-வது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இரு தவணை தடுப்பூசிகளைச் செலுத்தியபோதிலும் அவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அமைச்சர் திலிப் வால்சே பாட்டீல் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “ எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான் நலமாக இருக்கிறேன். என்னுடைய மருத்துவரின் ஆலோசனைப்படிதான் செயல்பட்டு வருகிறேன்.

நான் சமீபத்தில் நாக்பூர், அமராவதி உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் செய்திருந்தேன். அப்போது என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனை செய்து கொள்ளவும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in