

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்ற பாகிஸ்தான் அணியைப் புகழ்ந்தாலோ அல்லது அந்த அணியின் வெற்றியைக் கொண்டாடினாலோ கொண்டாடுவோர் மீது தேசதுரோக வழக்குப் பாயும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13-வது முறையில் முதல் வெற்றியைப் பெற்றது.
பாகிஸ்தான் வரலாற்று வெற்றி பெற்றதை அந்நாட்டு மக்கள் கொண்டாடினார்கள். ஆனால், அதை இந்தியாவில் உள்ள காஷ்மீர் மக்களும் கொண்டாடியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஷெர் ஐ காஷ்மீர் இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடினர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகளை சிலர் எடுத்து, காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜய் குமாருக்கு அனுப்பினர். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியது மட்டுமின்றி, இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிச்பூர் நகரில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள், இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தானைப் புகழ்ந்தும், வீரர்களைப் புகழ்ந்தும் கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோவும் வைரலானது. இதையடுத்து, பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் ஜகதீஸ்புரா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகார் பெற்ற காவல்நிலைய அதிகாரி விகாஸ் குமார், தகுந்த நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
போலீஸார் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்த 3 மாணவர்கள் மீது ஐபிசி பிரிவு 153ஏ, 505, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 எப் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மட்டும் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக 5 மாவட்டங்களில் 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 5 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தி நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியைக் குறிப்பிட்டு முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுவோர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.