

பாஜக தலைமையிலான மத்தியஅரசு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தொழில் துறைக்குச் சாதகமாகவும் செயல்படும் அரசு எனமத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மருந்தகங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையின் வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
பாஜக தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவான, தொழில் துறை வளர்ச்சிக்கு உகந்த அரசாக உள்ளது. தொழில்துறை முன்னேற்றம் அடைந்து நிலையான வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்திய நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளில் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை உறுதி செய்வதே நம்முடைய முதன்மை குணமாக உள்ளது.
கரோனா முதல் அலை பாதிப்பின்போது உலகம் அதற்கானமருந்துகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் அத்தகைய நெருக்கடியான நிலையை இந்தியா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு, உள்நாட்டு மருந்து தேவைகளையும் நாமே பூர்த்தி செய்துகொண்டோம். உள்நாட்டு தேவைகளைப் பூர்த்திசெய்ததோடு 150 நாடுகளுக்குமருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளோம். இது இந்திய தொழில் துறையின் அர்ப்பணிப்புக்கு அடையாளமாகும்.
இதன்மூலம் இந்தியா உலகிலேயே பெரிய ஜெனரிக் மருந்து உற்பத்தியாளராகவும் விற்பனையாளராகவும் விளங்குகிறது. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதில் இந்தியா மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே உலகிலுள்ள அனைவருக்கும் மருந்துகள் வாங்கும் திறனில் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல் படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ