

கர்நாடக மாநிலத்தில் 2 வாரங்களாக குடகு மாவட்டத் திலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து மண்டியா மாவட்டம் ரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் உயர்ந்ததால், தமிழகத்துக்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 124.10 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 19 ஆயிரத்து 750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 6,550 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து காவிரி நீர்ப்பாசன துறை அதிகாரிகளும், விவசாயிகளும் நேற்று பூக்களைத் தூவி வணங்கினர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நாளை காலையில் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு சென்று பாகினா எனப்படும் சமர்ப்பண பூஜை செய்கிறார். அப்போது வருண பகவானுக்கும், காவிரி தாய்க்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அணையின் நீரில் பூக்களையும், தானியங்களையும் தூவி வழிபாடு மேற்கொள்வார். கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மைசூரு, மண்டியா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.