

தேசத்தின் பிரதமர் தேசத்தைவிட மேலானவர் அல்ல என்று பெகாஸ் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்றுப் பேசியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பெகாசஸ் மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாங்கள் போராடினோம். அரசு பதிலளிக்கவில்லை. நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம். எந்த பதிலும் இல்லை. இப்போது எங்களின் நிலைப்பாட்டிற்கு ஒரு நியாயம் கிடைத்துள்ளது. அதனால், எங்களின் கேள்விகள் எல்லாம் நியாயம் பெற்றுள்ளன. ஒரு அங்கீகாரம் பெற்றுள்ளன.
இன்று நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியது யார்? அதை வாங்க அனுமதியளித்தது யார்? யாரெல்லாம் இதில் பாதிக்கப்பட்டனர்? வேறு எந்த நாட்டுக்கும் நம் மக்களின் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதா? அப்படியென்றால் என்ன மாதிரியான தகவல் அவர்களுக்குக் கிடைத்துள்ளது? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விகளைத் தான் எதிர்க்கட்சிகளாக நாங்களும் எழுப்பினோம். பெகாசஸ் உளவு மென்பொருளை ஓர் அரசாங்கம் தான் வாங்க முடியும் என்றால், அதற்கு பிரதமரோ உள்துறை அமைச்சரோ தானே அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
அப்படியென்றால் நம் தேசத்தின் பிரதமர் இன்னொரு நாடுடன் கைகோத்துக் கொண்டு நம் நாட்டு மக்களை, அதுவும் தலைமை நீதிபதி, முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று தாக்குவார் என்றால், இது தேசத்தின் மீதான தாக்குதல் தானே? ஒரு வேளை பெகாசஸ் மென்பொருள் மூலம் திரட்டப்பட்ட தகவல் பிரதமர் அலுவலக மேசை மீது தான் இருக்கிறது என்றாலும் கூட அதுவும் முழுமையாக கிரிமினல் குற்றம் தான்.
மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது இது தொடர்பாக நாங்கள் விவாதத்தை முன்னெடுப்போம். விவகாரம் நீதிமன்றத்தில் இருந்தாலும் கூட நாங்கள் விவாதம் கோருவோம். தேசத்தின் பிரதமர் தேசத்தைவிட மேலானவர் அல்ல.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.