

ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் அமித் தேசாய் மற்றும் முகுல் ரோகத்கி ஆகியோரின் வாதங்களைக் கேட்ட பின்னர் விசாரணையை மும்பை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.
மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதில் ஆர்யன் கானுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. பலமுறை முயற்சித்தும் ஜாமீன் கிடைக்காததால் அவர் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்.
மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜாரானார். அப்போது அவர் "ஆர்யன் கான் போதை மருந்து உட்கொண்டதாக மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தவில்லை என்று வாதாடினார். ஆர்யன் கான் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆராய்ந்து போது. அது மிகப் பழைய உரையாடல் என்பதும், அதற்கும் அக்டோபர் 2 ஆம் தேதி கார்டீலியா கப்பலில் நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிகிறது.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆர்யன் கான், அந்தக் கப்பலில் செல்ல டிக்கெட் வாங்கவில்லை. அவரை விருந்தினராக அழைத்துள்ளனர்’’ என வாதாடினார். இந்தநிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் சார்பில் அமித் தேசாய், முகுல் ரோஹத்கி மற்றும் அலி காஷிப் கான் தேஷ்முக் ஆகியோர் இன்று வாதிட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட அர்பாஸ் மெர்ச்சன்ட் சார்பாக ஆஜரான தேசாய், ‘‘இது ஒரு சதி வழக்கு என்று முதல் ரிமாண்டின் போது நீதிமன்றம் தவறாக நம்பப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்’’ என்றார்
ஆர்யன் கான் சார்பில் இன்று ஆஜராகரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, கைது மெமோ கைதுக்கான உண்மையான, சரியான காரணத்தை அளிக்கவில்லை. குற்றவியல் சட்டத்தின் 50 ஐ விட அரசியலமைப்பின் 22 வது பிரிவு முக்கியமானது. கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படாமல் எந்த நபரையும் கைது செய்யக்கூடாது.
அந்த நபருக்கு தனது வாதத்தை சொல்ல உரிமை உண்டு என்றும் அது கூறுகிறது. அவர் விரும்பும் வழக்கறிஞரை அணுகவும் வாய்ப்பளிக்கிறது. ஆர்யன் கானிடம் இருந்து பெரிய அளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டதாகக் கூறி ரிமாண்ட் விண்ணப்பம் தவறாக வழிநடத்துகிறது. ரிமாண்ட் விண்ணப்பத்தில் சரியான உண்மைகள் குறிப்பிடப்பட வேண்டும் ’’ எனக் கூறினார்.
இந்த வழக்கில் வாதங்கள் நிறைவு பெறாததால் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்யன் கான் இன்றும் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.