

அமரீந்தர் சிங் துப்பாக்கியில் இருந்து வெளியேறி விட்ட குண்டு ஆவார், இதனால் பஞ்சாப் மாநிலத்துக்கும் எந்த பயனும் இல்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்து விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கிய அமரீந்தர் சிங் கடந்த மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி சென்று சந்தித்தார். இதுஅரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியது. பாஜகவில் அமரீந்தர் சேரப்போகிறார் என்று பேசப்பட்டது. ஆனால், பஞ்சாப் எல்லைப் பிரச்சினை குறித்து அமித் ஷாவுடன் அமரீந்தர் சிங் பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அமரீந்தர் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாளை நாங்கள் எங்களுடன் டெல்லிக்கு சிலரை அழைத்துச் செல்கிறோம். சுமார் 30 பேர் வரை அந்த குழுவில் இடம் பெறுவர். விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளோம். மூன்று விவசாய சட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவுள்ளோம். பாஜகவுடன் கூட்டணி என்று நான் கூறவில்லை. தொகுதிகளை பகிர்ந்து கொள்வோம் என்று தான் கூறினேன்.
சித்துவுக்கு எதுவும் தெரியாது. அதிகம் பேசுவார் ஆனால் மூளை இல்லை. சித்து கூறியபடி நான் அமித் ஷாவிடம் பேசவில்லை. ஆனால் நான் பேசுவேன். காங்கிரஸ், அகாலிதளம், ஆம் ஆத்மிக்கு எதிராக நான் வலுவான கூட்டணி அமைக்க விரும்புகிறேன். இந்த கட்சிகளை முறியடிக்க ஒற்றுமையாக களமிறங்குவோம்.
வாய்ப்பு இருந்தால் 117 தொகுதிகளிலும் போட்டியிடுவோம், இல்லை என்றால் சில இடங்களில் தொகுதி பங்கீடு மட்டும் செய்வோம். நவ்ஜோத் சிங் சித்துவை பொறுத்த வரையில் அவர் எங்கு போட்டியிட்டாலும் நாங்கள் அவரை எதிர்த்து போட்டியிடுவோம்.
ஆம், நான் புதிதாக கட்சி தொடங்குகிறேன். எனது வழக்கறிஞர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பெயரை இப்போது சொல்ல முடியாது, தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்தவுடன் சொல்கிறேன். சின்னம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தையும் பிறகு அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அம்ரீந்தர் சிங்கை கடுமையாக விமர்சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘அமரீந்தர் சிங் துப்பாக்கியில் இருந்து வெளியேறி விட்ட குண்டு ஆவார். இதனால் பஞ்சாப் மாநிலத்துக்கும் எந்த பயனும் இல்லை. அமரீந்தர் தனது உடல் தோலைக் காப்பாற்றுவதற்காக மாநிலத்தின் நலனை விற்ற பஞ்சாபின் முன்னாள் முதல்வர். மத்திய அமலாக்க இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவாசமான முதல்வர் இவர். பஞ்சாபின் நீதி, வளர்ச்சியைத் தடுக்கும் எதிர்மறை சக்தியாக நீங்கள் இருந்தீர்கள்
என்று குற்றம் சாட்டினார்.