Published : 27 Oct 2021 04:10 PM
Last Updated : 27 Oct 2021 04:10 PM

பிரியங்காவின் அரசியல் வேகத்தில் இந்திரா காந்தியின் நிழல்: சிவசேனா புகழாரம்

பிரியங்கா காந்தி.

மும்பை

பிரியங்காவின் வேகமான அரசியல் செயல்பாடுகளில் இந்திரா காந்தியின் நிழலைக் காணமுடிவதாகவும் இதனால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அவர் முன்பைவிட உயர்த்தியுள்ளதாகவும் சிவசேனா கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

லக்கிம்பூர் கிரி வன்முறையை சிலர் மூடிமறைக்க முயன்றபோது அங்கு விவசாயிகளுக்கு நடந்த அநீதிகளை அம்பலப்படுத்திய வகையில், பிரியங்கா காந்தியின் செயல்பாடுகளில் அவரது பாட்டி இந்திரா காந்தியின் நிழலை காணமுடிகிறது என்று சிவசேனா சாம்னா வாரந்திர இதழ் பாராட்டுரை வழங்கியுள்ளது.

சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் இதுகுறித்து கூறிள்ளதாவது:

பிரியங்காவின் சகோதரரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மட்டுமே தலைவர் என்று கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது கட்சிக்குள்ள நெருக்கடியான சூழலில் தான் ஒரு மாற்றுத்தலைவராக உருவெடுக்கமுடியும் என்ற நிலையை பிரியங்கா உருவாக்கியுள்ளார்.

இந்த லக்கிம்பூர் கேரி கொலைகளால் யோகி அரசாங்கம் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டபோது, அந்த உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்களை சந்திக்க பிரியங்கா காந்தி சென்றார் ஆனால் அவர் ​​சட்டவிரோதமாக போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த விதம் பாராட்டுக்குரியது. இக்கொலைகளை உ.பி அரசு மூடிமறைக்க முயன்றபோது கொடூரமான கொலைகள் குறித்து தேசத்தை விழிப்படையச் செய்வதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

இந்திரா காந்தியின் 1977 கால சம்பவங்களோடு பிரியங்காவின் லக்கிம்பூர் சம்பவங்கள் அமைந்திருப்பதை நாம் காணமுடியும்.

லக்கிம்பூரில் நடந்த போராட்டத்தின்போது கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி 4 விவசாயிகள் 3 வாகனங்கள் மூலம் மோதி கொல்லப்பட்டனர், அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இச்சம்பவத்துடன் தொடர்புடையவராக இருந்தார். இதனால் கோபமடைந்த விவசாயிகள் கான்வாயில் இருந்த நான்கு பேரை அடித்துக் கொன்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளை உயிரிழந்த விவசாயக் குடும்பங்களைச் சந்திக்க லக்கிம்பூர் கெரிக்கு வர விரும்பியதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் கூடுவதைத் தடைசெய்து மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவின்கீழ் 144 ஐ விதித்தது. எனினும் பிரியங்கா காந்தி அங்கே செல்ல முயன்றார்.

இத்தகைய சூழ்நிலையில், உ.பி. காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தந்திரமாக பிரியங்கா காந்தி சீதாப்பூரை அடைந்தார். ஆனால் தடை உத்தரவை மீறியதற்காக அங்கு அவர் கைது செய்யப்பட்டார். அரசு விருந்தினர் மாளிகையில் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பிறகு இறுதியாகத்தான் விவசாயிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

சீதாபூரில் பிரியங்காவுக்கு கிடைத்த ஆதரவை அவரது போட்டியாளர்கள் கவனித்தனர். ஓய்வு இல்லத்தின் தரையை துடைப்பம் கொண்டு அவர் சுத்தம் செய்யும் படங்கள் சில அரசியல்வாதிகளின் ஒரு நாள் புகைப்பட அமர்வை சுத்தமாக மறைத்துவிட்டது.

லக்னோவில் இச்சம்பவங்களுக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திரத்தின் 75-வது ஆண்டை நினைவு கூறும் நிகழ்ச்சியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற புகைப்படங்களை விட பிரியங்காவின் படங்களே பெருமளவில் கவனத்தை ஈர்த்தன.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்திரா காந்தியின் அக்கால கட்ட சம்பவங்களே நினைவுக்கு வருகின்றன.

அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த இந்திரா காந்தி, பெல்ச்சி படுகொலையில் (மே 27) பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது அன்றைய அரசாங்கத்தால் பெரிய குற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பிஹார் சென்ற சில மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 3, 1977 அன்று மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இந்திரா காந்தி கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு இணையாக பிரியங்காவின் செயல்பாடுகள் மிளிர்கின்றன. அதுவே 1980 லோக்சபா தேர்தலில் இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வரவும் மீண்டும் பிரதமர் பதவி ஏற்கவும் அடித்தளமாக அமைந்தது. இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது, பிரியங்காவின் வேகமான அரசியல் செயல்பாடுகளில் இந்திரா காந்தியின் நிழலைக் காணமுடிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு முன்பைவிட மிக நன்றாக உயர்ந்துள்ளது.

நேற்று (செவ்வாய்க் கிழமை) ராகுல் காந்தியை நான் சந்தித்தேன். அப்போது அவர் கூறியது மிக முக்கியமானதாகப் படுகிறது, தற்போதைய பாஜக அரசாங்கம் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வருகிறது. இதனை எதிர்த்துதான் பிரியங்கா துணிச்சலாக செயல்பட்டு வருகிறார். பிரியங்கா ஒரு துணிச்சலான பெண், அவர் சிறையில் அடைக்கப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்த்துப் போராட நான் உறுதியாக உள்ளேன்.என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை ஆளும் பாஜகவுக்கு உதவக்கூடிய வகையில் செயல்படுகின்றன. உண்மையான விளையாட்டில் நுழைந்து ஒரு மோசமான ஆட்டத்தை ஆடுவதுபோல அவர்கள் செயல்கள் இருப்பதால் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இது நல்ல நகைச்சுவை: பாஜக விமர்சனம்

பிரியங்காவை பாராட்டும் சாம்னா தலையங்கம் குறித்து பாஜக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிராவின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராம் கதம் கூறியதாவது:

“காங்கிரஸை நல்ல நகைச்சுவைக்குள் வைத்திருக்க சிவசேனா விரும்புவதையே இது காட்டுகிறது. சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே தனது வாழ்நாள் முழுவதும் காங்கிரஸை எதிர்த்தார், தந்தை பால் தாக்கரே எந்த காங்கிரஸை எதிர்த்தாரோ அதே காங்கிரஸை தான் பதவியின் நீடிக்கவேண்டும் என்பதற்காக அவரது மகன் உத்தவ் தாக்கரே காங்கிரஸை மகிழ்வித்து வளைந்துகொடுத்து பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார். அந்த வகையில் உத்தவ் தாக்கரே ஒரு முதல்வராக தோல்வியடைந்துவிட்டார், உத்தரபிரதேசத்தை நோக்கி விரலைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது தவறான நிர்வாகத்தால் மோசமான நிலையில் இருக்கும் மகாராஷ்டிராவில் அவர் கவனம் செலுத்த வேண்டும்”.

இவ்வாறு மகாராஷ்டிரா பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராம் கதம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x