

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு செயல்படுத்திவரும் முதியோருக்கான இலவசப் புனிதப் பயணப் பட்டியலில் அயோத்தி நகரமும் சேர்க்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார்.
இதற்கான முறையான ஒப்புதலை முதல்வர் கேஜ்ரிவால் தலைைமயிலான அமைச்சரவை இன்று வழங்கியது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக முதியோருக்கான புனிதப் பயணச் சுற்றுலா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் தொடங்கும் எனத் தெரிகிறது.
டெல்லி அரசு சார்பில் ஆண்டுதோறும் முதியோருக்கான இலவசப் புனிதப் பயணம் அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் முதியோர்கள் அந்தந்தத் தொகுதி எம்எல்ஏவின் கடிதத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் முதியோர்கள், முதல்வர் தீர்த்த யாத்திரை விகாஸ் சமதி திட்டத்தின் கீழ் ஆன்மிகப் புனித இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
முதியோருக்குத் தேவையான போக்குவரத்துக் கட்டணம், உணவு, தங்கும் வசதி, மருத்துவ வசதி, உதவியாளர் அனைத்தையும் டெல்லி அரசின் பொறுப்பாகும். இந்தத் திட்டம் கரோனா வைரஸ் பரவல் செயல்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. விரைவில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அயோத்திக்குச் சென்று ஸ்ரீ ராமஜென்ம பூமியில் வழிபாடு செய்து திரும்பினார். உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. அயோத்தி சென்றுவிட்டு வந்தபின் இந்த அறிவிப்பை முதல்வர் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ''முதல்வர் தீர்த்த யாத்திரை விகாஸ் சமிதி திட்டம் அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தில் புதிதாக அயோத்தி நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை டெல்லி அமைச்சரவை வழங்கியதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இந்தத் திட்டத்தில் இதுவரை டெல்லியைச் சேர்ந்த 35 ஆயிரம் முதியோர்கள் பயன் அடைந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள முதியோர்கள் இலவசமாக நாட்டின் முக்கிய ஆன்மிக ஸ்தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். முதியோர் தங்களுடன் இலவசமாக ஒரு உதவியாளரையும் அழைத்து வரலாம்'' எனத் தெரிவித்தார்
2019-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்தத் திட்டத்தில் மத்தியப் பிரதேசத்தின் வைஷ்னவ் தேவி கோயில், ஷீர்டி சாய்பாபா, ராமேஸ்வரம், துவராகா, பூரி, ஹரித்துவார், மதுரா, ரிஷிகேஷ், பிருந்தாவன் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகப் புனித இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் டெல்லியில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மட்டும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.