Published : 27 Oct 2021 14:14 pm

Updated : 27 Oct 2021 14:14 pm

 

Published : 27 Oct 2021 02:14 PM
Last Updated : 27 Oct 2021 02:14 PM

கோழையான பாசிஸ்ட்களின் கடைசிப் புகலிடம் போலி தேசியவாதம்தான்: பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு

congress-welcomes-supreme-court-order-on-pegasus-snooping-matter
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா | கோப்புப்படம்

புதுடெல்லி

அனைத்து இடங்களிலும் கோழைத்தனமான பாசிஸ்ட்களின் கடைசிப் புகலிடம் போலி தேசியவாதம்தான் என்று பெகாசஸ் விவகாரத்தில் வல்லுநர் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தகவல் வெளியானது.

இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் என்.ராம், எடிட்டர் கில்ட் ஆஃப் இந்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பளித்து. அந்தத் தீர்ப்பில், “சமூகத்தில் பல்வேறு வகையான மக்களைக் கண்காணிக்க இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் மென்பொருளை வைத்து மத்திய அரசு உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வல்லுநர்கள் குழுவை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கிறோம்.

இந்த விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்த தெளிவான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருந்தால், இந்த உத்தரவை நாங்கள் பிறப்பித்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. பெகாசஸ் குற்றச்சாட்டை மத்திய அரசு எந்தவிதத்திலும் மறுக்கவில்லை. தேசியப் பாதுகாப்பு என்ற விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வரும் மத்திய அரசுக்கு அனைத்திலும் விலக்கு அளிக்க முடியாது.

நீதித்துறை மறு ஆய்வுக்கு எதிராக தேசியப் பாதுகாப்பைக் காரணம் கூறி சாதாரணமாகத் தடை விதிக்க முடியாது. இங்கு மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்க வேண்டும், நீதிமன்றத்தை வாய் மூடிப் பார்வையாளனாக ஆக்கிவிடக் கூடாது.

மக்களின் அந்தரங்க உரிமை, பேச்சு சுதந்திரம் உரிமை ஆகியவை உளவு பார்க்கும் விஷயத்தில் முழுமையாக மீறப்பட்டுள்ளன. உளவு பார்க்கப்பட்ட விவகாரம், அறிக்கை போன்றவை மற்ற நாடுகளில் தீவிரமாக எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. மற்ற நாடுகளின் உளவு மென்பொருள் மூலம் கண்காணிப்புக்குப் பயன்படுத்துவது தேசியப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும்” எனத் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவிந்திரன் வல்லுநர்கள் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அசோக் ஜோஷி, டாக்டர் சந்தீப் ஓப்ராய், குஜராத் காந்தி நகர் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் டீன் டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, கேரளாவில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யாபீடத்தின் பேராசிரியர் டாக்டர் பி. பிரபாகரன், மும்பை ஐஐடி பேராசிரியர் டாக்டர் அஸ்வின் அனில் குப்தே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. அந்தக் கட்சியின் தேசிய தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ பெகாசஸ் விவகாரத்தில் வல்லுநர் குழு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் கவனத்தை திசை திருப்பவும், தவிர்க்கவும், ஒதுக்கவும், மோடி அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சத்யமேவ ஜெயதே. அனைத்து இடங்களிலும் கோழைத்தனமான பாசிஸ்ட்களின் கடைசிப் புகலிடம் போலி தேசியவாதம்தான்” எனத் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

The CongressName of national security.Expert committeePegasus spyware issueThe Supreme Court orderDivert attentionகாங்கிரஸ் கட்சிபெகாசஸ் விவகாரம்உச்ச நீதிமன்றம் தீர்ப்புகாங்கிரஸ் வரவேற்புபாசிஸ்ட்டுகள்போலி தேசியவாதம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x