Last Updated : 27 Oct, 2021 03:07 AM

 

Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

டெல்லிவாசிகள் அயோத்தி செல்ல இலவச புனித சுற்றுலா வசதி: ராமரை தரிசித்த முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி

உத்தரபிரதேசம் சுல்தான்பூரில் நடைபெற்ற தன் மீதான ஒரு வழக்கில் ஆஜராக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் சுல்தான்பூர் வந்திருந்தார். அங்கிருந்து அயோத்தி சென்றவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அன்றைய தினம் அங்கேயே தங்கினார். மாலையில் அயோத்தியின் சரயு நதிக்கரையில் தீபாராதனை நடத்தினார்.

பிறகு அங்குள்ள சாதுக்களுடன் அமர்ந்து ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட்டு பஜனைகளில் கலந்து கொண்டார் கேஜ்ரிவால். நேற்று அயோத்தி ராமர் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், ‘‘எனக்கு, கடவுள் பலத்தைஅளித்துள்ளார். இதை வைத்துஅயோத்திக்கு புனிதச் சுற்றுலாவாக வரும் டெல்லிவாசிகள் அனைவருக்கும் இலவச ஏற்பாடுகளை எனது அரசு செய்யும். ஏற்கெனவே வைஷ்ணோதேவி, ஷிரடி உள்ளிட்ட இடங்களுக்கு இலவச புனித சுற்றுலா திட்டம் அமலாகி உள்ளது. அதில், அயோத்தியும் சேர்க்கப்படும்" எனத் தெரிவித்தார்.

உ.பி.வாசிகளுக்கும்...

தொடர்ந்து அவர், அடுத்த ஆண்டு வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் ஓர் அறிவிப்பு வெளியிட்டார். இதில், தனித்து போட்டியிடும் அவரது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் அனைத்து உ.பி.வாசிகளும் இலவசமாக அயோத்திக்கு புனித சுற்றுலா வர ஏற்பாடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசும்போது, ‘இதற்கு முன் கடவுள் ஸ்ரீராமரை விமர்சிக்கத் தயங்காதவர்கள், இன்று அவரைக் காண அயோத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் அவர்களது வருகையின் மூலம் ஸ்ரீராமர் இருப்பதை ஆமோதித்துள்ளனர். கரோனா காலத்தில் உ.பி.வாசிகளை பாதுகாக்காமல் வெளியேற்றியவர்களுக்கு இன்றுஅம்மாநிலத்தின் நினைவு வந்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் கேஜ்ரிவால், ‘அயோத்திசெல்வதற்கான எங்கள் அரசின் இலவச சுற்றுலா மூலம் கோடிக்கணக்கானவர்கள் ஸ்ரீராமரை தரிசிப்பார்கள். இதை யோகிஜி ஏன் விமர்ச்சிக்கிறார்?’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x