

தேசத்தை துண்டாட விரும்புவோர்க்கு ராகுல் காந்தி ஆதரவாக இருக்கிறார் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மாநாட்டில் பங்கேற்ற அருண்ஜேட்லி பேசியதாவது:
ஜாமீனில் சிறையிலிருந்து வெளி வந்த பின் கண்ணய்யா குமாரின் பேச்சு எங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்தியாவுக்கு எதிரான கோஷத்துடன் சிறை சென்ற அவர், சிறையிலிருந்து வெளி வந்தபிறகு ஜெய்ஹிந்த் என முழக்கமிடுகிறார்; மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார்.
தற்போது புதிய நடைமுறை உருவாகியுள்ளது. சிலர் யாகூப் மேமனுக்கும், சிலர் அப்ஸல் குருவுக்கும் நினைவு கூரல் நிகழ்ச்சி நடத்த விரும்புகின்றனர். இவர்கள், சிறிய எண்ணிக்கையில் இருக்கும் ஜிகாதிகள் மற்றும் பெருமளவு இருக்கும் மாவோயிஸ்டுகளை சமரசப்படுத்த பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்தேசத்தை துண்டாடும் கோஷங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுவரை தேசிய நீரோட்டத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் தற்போது, இதுபோன்றவர்களின் ஆதரவாளர்களாக மாறியிருப்பது துரதிருஷ்டவசமானது. மகாத்மா காந்தி, பாபா சாகேப் அம்பேத்கர், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இதனை ஒரு போதும் செய்ததில்லை. தற்போது நடப்பதற்குக் காரணம் சித்தாந்த வெறுமை.
இவ்வாறு அவர் பேசினார்.