Published : 26 Oct 2021 07:07 PM
Last Updated : 26 Oct 2021 07:07 PM

சோனியாவிடமிருந்து எந்த பதிலுமில்லை; எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் ஒன்றிணைக்கும் வரை காத்திருக்க முடியாது: திரிணமூல் திடீர் முடிவு

கொல்கத்தா

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரஸ் கட்சிக்காகக் காலவரையின்றி காத்திருக்க முடியாது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைத் தவிர்த்துவிட்டு எதிர்க்கட்சிகள் இதுகுறித்து யோசிக்க முடியாது என்ற நிலைதான் உள்ளது. எனினும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து காங்கிரஸ் எந்தவித முன்னேற்பாடும் இல்லாத நிலையில்தான் உள்ளது.

தற்போது 2022-ம் ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்தத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படுவதற்காகத் திட்டமிட்டு வருகிறது. வரவிருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெபாசிட் கூட கிடைக்காது: லல்லு

இதற்கிடையே 2024 தேர்தல் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக அவ்வப்போது காங்கிரஸ் கட்சியை அணுகவும் எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. ஆனால், பிஹாரில் இனி நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று அந்தக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸுக்காகக் காத்திருக்க முடியாது: திரிணமூல்

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைப் போல முற்றிலும் நிராகரிக்காமல், தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக காங்கிரஸுடன் இணைந்து செயலாற்ற ஆர்வம் காட்டிவந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி, அவர்களிடமிருந்து பதில் வராத நிலையில் இனி காத்திருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் சுகேந்து சேகர் ராய் இதுகுறித்து இன்று கூறியதாவது:

''பாஜகவை எதிர்த்துப் போராட பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைத் தனது கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அணுகினார். ஆனால் பலனில்லை.

அவர்களிடமிருந்து பதில் வராத நிலையில் இனி காலவரையறையின்றி காங்கிரஸுக்காக காத்திருக்க முடியாது. எனவே, எங்கள் கட்சி (திரிணமூல் காங்கிரஸ்) தனது சொந்த வழியில் சென்று தனது அடித்தளத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

பாஜகவை எதிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி வைப்பதற்காக, திரிணமூல் காங்கிரஸ் தலைவரைத் தவிர வேறு யாரும் முன்மொழியவில்லை. அவர் சோனியா காந்தி மற்றும் பல தலைவர்களைச் சந்தித்தார்''.

இவ்வாறு சுகேந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x