காஷ்மீர் மக்கள், இளைஞர்களோடு மட்டுமே பேசுவேன் பாகிஸ்தானுடன் பேச தேவையில்லை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

காஷ்மீர் மக்கள், இளைஞர்களோடு மட்டுமே பேசுவேன் பாகிஸ்தானுடன் பேச தேவையில்லை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்
Updated on
1 min read

காஷ்மீர் மக்களோடு பேசுவேன், பாகிஸ்தானோடு பேச தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மேடையில் அமைக்கப் பட்டிருந்த குண்டு துளைக்காத கண்ணாடியை அகற்றிவிட்டு பேசினார். அவர் கூறியதாவது:

மேடையில் இருந்த குண்டு துளைக்காத கண்ணாடியை அகற்றிவிட்டேன். இதுபோல காஷ்மீர் மக்கள் தங்கள் உள்ளத்தில் இருந்து அச்சத்தை தூக்கி எறிய வேண்டும். உங்களோடு திறந்த மனதோடு பேசுகிறேன். கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் இளைஞர்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை. இப்போது அவர்களுக்கு சமஉரிமை கிடைத்துள்ளது. பாகிஸ்தானோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். நான் காஷ்மீர் மக்களோடு, காஷ்மீர் இளைஞர்களோடுபேசுவேன்.

பாகிஸ்தானோடு பேச தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நகரில் உள்ள பவானி கோயிலில் அமைச்சர் அமித் ஷா வழிபாடு நடத்தினார். பொதுக்கூட்டத்துக்குப் பிறகு புல்வாமா மாவட்டம், லேத்போராவில் உள்ள சிஆர்பிஎப் முகாமுக்கு அவர் சென்றார். நேற்றிரவு சிஆர்பிஎப் முகாமில் அவர் தங்கி வீரர்களுடன் கலந்துரையாடினார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. இதில் அமைச்சர் அமித் ஷா முக்கிய பங்கு வகித்தார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல்முறையாக அவர் ஜம்மு-காஷ்மீர் சென்றது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அண்மைகாலமாக காஷ்மீரில் இந்துக்கள், சீக்கியர்கள், வெளி மாநில மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடன் அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in