Published : 26 Oct 2021 08:24 AM
Last Updated : 26 Oct 2021 08:24 AM

கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் 2 தடுப்பூசி செலுத்தியவர்கள்; 6 மாதங்களுக்கு மேல் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லை: மம்தா குற்றச்சாட்டு

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

சிலிகுரி


மேற்கு வங்கத்தில் கரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலும் இரு தடுப்பூசிகளைச் செலுத்தியவர்கள்தான். ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தியவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி 6 மாதங்களுக்கு மேல் நீடிப்பதில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த வாரத்தில் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன. கரோனா தொற்று குறைந்துள்ளபோதிலும் மக்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், பெரும்பாலும் அதுபோன்ற இடங்களை தவிர்த்துவிடுமாறும்,சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், துர்கா பூஜையின் போது ேம.வங்கத்தில் மக்கள் பெரும்பாலும் சமூக விலகலைக் கடைபிடிக்காமல்,முகக்கவசம் அணியாமல் பங்கேற்றார்கள் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 4 நாட்களாக மே. வங்கத்தில் கரோனா தொற்றில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து மாநில சுகாதாரத்துறையினருடன் துணை தலைமைச் செயலகமான உத்தரகான்யாவில் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

“ கரோனாவில் பாதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மீண்டும் கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு எவ்வாறு நடக்கிறது. எவ்வாறு அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதுஏதாவது ஒருவருக்கு நடந்தால் பரவாயில்லை, பலரும் இவ்வாறு இருக்கிறார்கள்.

மே.வங்கத்தில் சமீபத்தில் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலும், இரு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள்தான். தடுப்பூசி வழங்கும் நோய் எதிர்ப்புச் சக்தி 6 மாதங்களுக்கு மேல் நீடிப்பதில்லை என்ற காரணத்தால்தான் மீண்டும் கரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். எல்லாம் வெற்றுப்பேச்சு. மாநில சுகாதாரத்துறையினர் மத்திய அரசு அதிகாரிகளுடன் இது குறித்து கலந்து பேசி அறிக்கை அளிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது குறித்து நமக்கு அனைத்தும் தெரியும். ஆனால், இதைப் பற்றி உங்கள் வீட்டுக்கு வெளியே எவ்வளவு பேசியுள்ளீர்கள் என எனக்குத்தெரியாது. ஆனால் உண்மை இருக்கிறது.

பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை 100 கோடி தடுப்பூசி செலுத்தியது குறித்து பெருமையாகப் பேசினார். ஆனால், கோவாக்சின் மருந்துக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காதது குறித்துஏன் பேசவி்ல்லை.

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டர்கள் ஏன் மீண்டும் கரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது ஆய்வு செய்து அறிக்கையை சுகாதாரத்துறை செயலர் நிகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்”
இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலர் என் எஸ் நிகம்கூறுகையில் “ இரு தடுப்பூசி செலுத்திக் கொண்டர்கள் ஏன் மீண்டும் கரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள், காரணம் என்ன என்று கேட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுவேன். இரு முறை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தது குறித்து மத்திய அரசு ஏதேனும் ஆய்வு நடத்துகிறதா என்றும் கேட்போம்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x