முல்லை பெரியாறு அணையில் அதிகபட்சம் எவ்வளவு நீரை தேக்க முடியும்?- இரு மாநில அரசுகளுடன் ஆலோசித்து விரைவாக முடிவு எடுக்க வேண்டும்: அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லை பெரியாறு அணையில் அதிகபட்சம் எவ்வளவு நீரை தேக்க முடியும்?- இரு மாநில அரசுகளுடன் ஆலோசித்து விரைவாக முடிவு எடுக்க வேண்டும்: அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

கேரளாவில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு முல்லை பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு நீரை தேக்க முடியும் என்பது குறித்து இருமாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து விரைவாக முடிவு எடுக்குமாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழகத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டத்தை பராமரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு பெரியாறு அணையால் மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கும் விதமாக துணைக்குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த துணைக்குழுவை கலைக்கக் கோரியும், அணை பாதுகாப்பு இயக்க முறைகளில் குளறுபடிகள் உள்ளதாகவும் கேரளாவைச் சேர்ந்த ஜாய் ஜோசப், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் விரிவான விவரங்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

புள்ளி விவரங்கள் தவறானவை

அதன்படி மத்திய அரசு தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில், பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும், பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து விட்டது என்றும், அதேநேரம் அணை தொடர்பாக கேரள அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் தவறானவை என்றும்தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிக்கை, தொழில்நுட்ப ரீதியாக தவறானது என மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘கனமழை பெய்துவருவதால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே பெரியாறு அணையில் நீரை 137 கன அடி வரை மட்டும்தேக்க உத்தரவிட வேண்டும்’’ எனகேரள அரசு தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு, தமிழக அரசு தரப்பில், ‘‘பெரியாறு அணையில் தற்போது 137 கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் அணைக்கு வரும் தண்ணீர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்காது என்பதால் அணைக்கு எந்த பிரச்சினையும்இல்லை’’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘கேரளாவில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பெரியாறுஅணைக்கு பாதிப்பு உள்ளது. அதனை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். கேரள மக்கள்அச்சத்தில் உள்ளனர்’’ என வாதிடப்பட்டது.

நீதிபதிகள் கண்டனம்

பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகள் மத்தியிலும் ஒருங்கிணைப்பு இல்லை எனகண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘‘தற்போதுள்ள அவசரச் சூழலைக்கருத்தில்கொண்டும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகள் சார்ந்த விஷயம் என்பதாலும் இந்த விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும். அதேநேரம் பெரியாறு அணையில் நீர்தேக்கம் தொடர்பாக நாங்களாக எந்த முடிவும் எடுக்க முடியாது. கேரள அரசுதரப்பில் கனமழை, வெள்ளம் தொடர்பாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது’’ என தெரிவித்தனர்.

மேலும் ‘‘பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு கன அடி நீரை தேக்க முடியும் என்பது குறித்து இருமாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து, அங்குள்ள சூழலைக் கண்காணித்து அணைப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவிரைந்து முடிவு எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நாளை (அக்.27)விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள் ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in