

பிஹாரில் இனி நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று அந்தக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் 3 ஆண்டுகளுக்குப் பின் பாட்னாவுக்கு நேற்று வந்தார்.
பிஹாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம், பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 இடங்கள் கொண்ட சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 43 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு 73 எம்எல்ஏக்கள் என 125 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையுடன் இருக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 75 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 எம்எல்ஏக்களுடன் உள்ளது. இதனியைடேய ரிசர்வ் தொகுதியான குஷ்வர் அஸ்தான், தாராபூர் ஆகியவற்றுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் லாலுவின் மகன்களான தேஜ் பிரதாப் அவரின் இளைய சகோதரர் தேஜஸ்வி இருவருக்கும் இடையே உரசல் நிலவுகிறது. இந்த உரசல் உறவு காரணமாக தேஜ் பிரதாப் ஆதரவாளரான மாணவர் பிரிவுத் தலைவர் ஆகாஷ் யாதவை சமீபத்தில் தேஜஸ்வி நீக்கினார். இதனால், இருவருக்கும் இடைய மோதல் ஏற்படும் சூழல் இருந்தது.
இந்நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த பாட்னாவுக்கு நேற்று லாலு வந்தார். பாட்னாவுக்குப் புறப்படும் முன் லாலு பிரசாத் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, வரும் இடைத்தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி தொடருமா என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு லாலு பிரசாத் பதில் அளிக்கையில், “என்னது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா, இனிமேலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், எங்கள் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது. எதற்காக அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் டெபாசிட் இழப்தற்காகவா?” எனத் தெரிவித்தார்.