

கேரள மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத் தினருக்கு மாதம் தலா 25 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் குறித்து தேர்தல் ஆணையம் மாநில அரசிடம் கேள்வியெழுப்பி யுள்ளது.
பட்ஜெட் தொடரில், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 20 லட்சம் குடும்பத்துக்கு மாதம் தலா 25 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்தார்.
கேரள சட்டப்பேரவைக்கு வரும் மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதைத் தொடர்ந்து, இலவச அரிசித் திட் டத்தை அனுமதிப்பதா, தடை விதிப்பதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இ.கே. மஜி, இத்திட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதா என்பது குறித்து ஆராயும்படி மாநில தலைமைச் செயலாளர் பி.கே. மொஹந்தி தலைமையிலான குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறை கள் மார்ச் 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ஆனால், அதற்கு முன்பே இத்திட்டம் அறி விக்கப்பட்டு விட்டது. அதே சமயம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி யிலிருந்துதான் திட்டம் அமலுக்கு வருகிறது.
இத்திட்டத்தை தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்கும்படி கேரள அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்ளவில்லை. ஒரு ஆலோசனைக்காகவே இப்பிரச் சினை தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உணவுத் துறை அமைச்சர் அனூப் ஜேகப் கூறும்போது, “திட் டத்தை அமல்படுத்துவது தாமத மானால், தேர்தல் ஆணையத்தை அணுகி, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே இக்கொள்கை முடிவு எடுக்கப்பட் டதை தெரிவிப்போம். கடந்த 2011-ம் ஆண்டு, வறுமைக் கோட் டுக்கு மேல் உள்ளவர்களுக்கு தலா ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததற்கு எதிராக கேரள உயர் நீதி மன்றத்தை அணுகி அனுமதி பெறப்பட்டது. இதனை முன்னு தாரணமாகக் காட்டுவோம்” என்றார்.