Published : 25 Oct 2021 11:05 AM
Last Updated : 25 Oct 2021 11:05 AM

7 ஆண்டுகளில் 157 புதிய மருத்துவக் கல்லூரிகள்; 16,000 எம்பிபிஎஸ் இடங்கள்: ரூ.17,691.08 கோடி மத்திய அரசு முதலீடு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

நாடுமுழுவதும் கடந்த 2014ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்ட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக ரூ.17,691.08 கோடி மத்திய அரசு முதலீடு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2014ம் ஆண்டு முதல், 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, இந்த திட்டங்களில் ரூ.17,691.08 கோடியை முதலீடு செய்துள்ளது.

இந்தத் திட்டங்கள் நிறைவடையும்போது, இளநிலை மருத்துவப்படிப்பில் 16,000 இடங்கள் சேர்க்கப்படும். 64 புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளதால், 6,500 இடங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள மாநில அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ரூ.2,451 கோடி வழங்கியுள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரிகள், தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளைத் தொடங்க மாநில / மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்படுகின்றன.

நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 எம்.பி.பி.எஸ் இடங்களை உருவாக்கும் நோக்கில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மத்திய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் இத்திட்டங்களுக்கு 90:10 என்ற விகித அடிப்படையில் மத்திய அரசும், மாநில அரசும் நிதிப் பங்களிப்பை அளிக்கின்றன. மற்ற மாநிலங்களில் 60: 40 என்ற விகிதத்தில் மத்திய அரசும், மாநில அரசும் நிதிப் பங்களிப்பை அளிக்கின்றன. 15 மாநிலங்களில் உள்ள 48 மருத்துவக் கல்லூரிகளில் 3325 மருத்துவ இடங்களை அதிகரிக்க மத்திய அரசு தனது பங்காக ரூ.6,719.11 கோடியை விடுவித்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x