

தனது நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை பலப்படுத்த புதிய சட்டத்தை சீன அரசு கொண்டு வந்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றுசீனா கூறி வருகிறது. மேலும் கடந்த ஆண்டு லடாக் எல்லையில் அத்துமீறி ஊடுருவ சீன ராணுவம் முயன்றது. இதைத் இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் இருதரப்பும் படைகளை குவித்துள்ளன. பதற்றத்தைக் குறைக்க 13 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், சீன அரசு தங்கள் நாட்டின் எல்லைகளின் பாதுகாப்புக்காக புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இந்தப் புதிய சட்டம் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளை பாதுகாக்க சீன அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் எல்லைப் பகுதிகளில் சமூக மேம்பாடு, அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சட்டம் வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போர் அல்லது ஆயுத ரீதியான மோதல் ஏற்பட்டால் சீனா தனது எல்லைகளை மூடவும் புதிய சட்டம் வழிவகை செய்கிறது. லடாக் எல்லையில் பதற்றம் நிலவிவரும்நிலையில், எல்லைப் பாதுகாப்புக்கு புதிய சட்டத்தை சீனா இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.