Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பாதுகாப்புப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்; தேச காவல் பணிக்கு தலைமை ஏற்பார்கள் என நம்பிக்கை

ஆயுதமேந்திய மத்திய பாதுகாப்புப்படைகளில் கடந்த 7 ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றுபிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார். இனிவரும் காலத்தில் தேசத்தின் காவல் பணிக்கு அவர்கள் தலைமை ஏற்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற பெயரில் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், 82-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளோம். இதுஇந்தியாவின் வலிமையை பறைசாற்றுகிறது. புதிய உத்வேகம், புதிய சக்தியுடன் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது.

நமது சுகாதாரத் துறை பணியாளர்கள் மனிதநேயத்துடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் மனிதநேயம், உழைப்பு, தொழில்நுட்ப திறனால் தடுப்பூசி திட்டத்தில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடினமான சூழலில் சுகாதார ஊழியர்கள் பணியாற்றுவது குறித்து ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

அவர்களில் ஒருவர் உத்தராகண்டின் பாகேஸ்வரை சேர்ந்த பூனம். இவர் கடினமான மலைப்பகுதியில் நாள்தோறும் 10 கி.மீ. பயணம் செய்து பொதுமக்களுக்கு தடுப்பூசிசெலுத்தி வருகிறார். அவரையும் அவரது குழுவையும் பாராட்டுகிறேன். இவரைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வுள்ள சுகாதார ஊழியர்களால் உத்தராகண்டில் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை தினம்

வரும் 31-ம் தேதி சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட உள்ளோம். தேசிய ஒற்றுமைக்காக பாடுபடுவது நமது கடமை. தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி குஜராத் போலீஸார், லாக்பாத் கோட்டையில் இருந்து ஒற்றுமை சிலை வரை மோட்டார்சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதேபோல திரிபுரா போலீஸாரும் ஒற்றுமை சிலைவரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்துக்கு ஏற்பாடு செய்துவருகின்றனர். இதன்மூலம் கிழக்கும் மேற்கும் இணைக்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள்ராணுவம், அரசு அலுவலகங்களுக்காக தேசப்பற்றுடன் மூவர்ண கொடியை தயாரித்து வருகின்றனர். இதேபோல நாட்டின் ஒற்றுமைக்காக நாம் எதையாவது செய்ய வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே புதியஉச்சத்தை எட்ட முடியும். வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்ல முடியும்.

நாடு முழுவதும் ரங்கோலிக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. இந்த ரங்கோலி கோலம் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தலாம். நமது வீட்டு வாசலில் சுதந்திர போராட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட இயக்கம் தொடர்பான படங்களை வரையலாம். தாலாட்டுப் பாடல்கள் வாயிலாக பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இந்தக் கலைக்கு புத்துயிர் அளித்து, தேசபக்தியோடு கலந்த தாலாட்டுப் பாடல்கள், கவிதைகள், பாடல்களை எழுதலாம்.

சர்தார் படேலின் பிறந்தநாளை ஒட்டி மத்திய கலாச்சார துறை சார்பில் தேசபக்திப் பாடல், ரங்கோலி கோலம், தாலாட்டு பாடல் தொடர்பான 3 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் பெரும்பாலானோர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டுகிறேன்.

ஐ.நா.வில் இந்தியாவின் பங்களிப்பு

அக்டோபர் 24-ம் தேதி ஐ.நா. தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா.சபையின் சக்தியை அதிகரிப்பதில் இந்திய பெண்களின் சக்தி மகத்தான பங்களிப்பை அளித்திருக்கிறது. கடந்த 1947-48-ல், ஐ.நாவின் மனிதஉரிமைகளுக்கான பிரகடனம் உருவாக்கப்பட்டபோது, அனைத்துஆண்களும் சமமாகவே படைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று எழுதப்பட்டது. இதற்கு இந்திய பிரதிநிதி ஹன்ஸா மெஹ்தா ஆட்சேபம் தெரிவித்ததால் அந்த வாக்கியம் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று திருத்தப்பட்டது.

ஐ.நா.வின் மற்றொரு இந்தியபிரதிநிதி லட்சுமி மேனன், ஐ.நா.சபையில் பாலின சமத்துவத்துக்காக குரல் கொடுத்தார். 1953-ம் ஆண்டில் விஜயலட்சுமி பண்டிட், ஐ.நா.வின் முதல் பெண் தலைவரானார்.

1950 முதல் ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிகளில் இந்தியா தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. யோகா, ஆயுர்வேதத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உலக சுகாதார அமைப்புடன் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது. கடந்த மார்ச் மாதம் உலக சுகாதார அமைப்பு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, இந்தியாவின் பாரம்பரியமான சிகிச்சை முறைகளுக்கென உலகளாவிய மையம் நிறுவப்பட உள்ளது.

அக்டோபர் 21-ம் தேதி காவலர்நினைவு தினத்தை கடைபிடித்தோம். நாட்டுக்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்த காவலர்களைஇந்த நாளில் நாம் நினைவுகூருகிறோம். இந்த காவலர்களோடு, அவர்களின் குடும்பத்தினரையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ராணுவம், காவல் துறை சேவைகள் ஆண்களுக்கானவை என்ற கருத்து இருந்தது. இன்று நிலைமை மாறியிருக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி கடந்த சில ஆண்டுகளில் பெண் காவலர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. 2014-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி பெண் காவலர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாகஇருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஆயுதமேந்திய மத்திய பாதுகாப்புப் படைகளில் கடந்த 7 ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கைஇரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நமது பெண்கள் மிகவும் கடினமான பணிகளையும் முழுச்சக்தியோடும், தன்னம்பிக்கையோடும் மேற்கொண்டு வருகின்றனர். பல பெண்கள் கமாண்டோக்களுக்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்களில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் பெண்களிடம் புதிய நம்பிக்கை பிறக்கிறது. பெண் காவலர்களிடம் நான்ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். அருகில் இருக்கும் பள்ளிகளில் பெண் குழந்தைகளோடு அவர்கள் கலந்துரையாட வேண்டும். இதன்மூலம் புதிய பாதை திறக்கும் என்பது எனது நம்பிக்கை. இனி வரும்காலத்தில், அதிக எண்ணிக்கையில் பெண் காவலர்கள் பணியில் இணைவார்கள். தேசத்தின் காவல் பணிக்கு தலைமை ஏற்பார்கள்.

மக்கள் சேவையில் ட்ரோன்கள்

நமது கிராமங்களின் நிலப்பரப்பை டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யும் தயாரிப்புப் பணிகளில்ட்ரோன்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதன்படி, உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

சரக்கு போக்குவரத்து, விவசாயம், வீட்டுக்கு பொருட்களை விநியோகம் செய்வது, பேரிடர் காலங்களில் நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்வது, சட்டம், ஒழுங்கு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ட்ரோன்களை அறிமுகம் செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை.

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி புதிய ட்ரோன் கொள்கையை அறிமுகப்படுத்தினோம். இந்தக்கொள்கை, தற்காலம், எதிர்காலத்தை கணக்கில் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ட்ரோன் பயன்பாடு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக ட்ரோன் தொடர்பான நிறுவனங்களில் உள்நாடு மற்றும் அந்நியமுதலீடு அதிகரித்து வருகிறது.

ராணுவ, விமான, கடற்படைகளுக்காக ட்ரோன்களை தயாரிக்க ரூ.500 கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ட்ரோன் தொழில்நுட்பத்தின் முன்னணி நாடாக நாம் மாற வேண்டும். இதற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x