பஞ்சாப் காங்கிரஸில் இதுவரை இல்லாத வகையில் சச்சரவு: மணீஷ் திவாரி

பஞ்சாப் காங்கிரஸில் இதுவரை இல்லாத வகையில் சச்சரவு: மணீஷ் திவாரி
Updated on
1 min read

புதுடெல்லி: பஞ்சாப் காங்கிரஸில் தற்போது நடைபெறும் சச்சரவை போல இதுவரை பார்த்ததில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் சமீப காலமாக கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. அங்கு எம்எல்ஏவாக இருக்கும் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் நீடித்தது. இதனால் முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். விரைவில் அவர் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமரீந்தர் சிங்குக்கும், பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவருக்கும் நீண்ட காலமாக தொடர்பு இருப்பதாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை அக்கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மறுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பஞ்சாபில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். அதுவும் இந்த சண்டையானது வெளிப்படையாகவே நடக்கிறது. ஒருவரையொருவர் அநாகரீகமான முறையில் திட்டிக் கொள்வது, தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இவற்றை பார்க்கும் மக்கள், காங்கிரஸ் மீது அதிருப்தி அடைய மாட்டார்கள் என கட்சி நிர்வாகிகள் நினைக்கிறார்களா? நான் 40 வருடங்களுக்கும் மேலாக காங்கிரஸில் இருக்கிறேன். ஆனால், பஞ்சாப் காங்கிரஸில் தற்போது நடைபெறும் சண்டை - சச்சரவை போல இதுவரை பார்த்ததில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in