கோவா மாநிலம் தன்னிறைவு பெற இரட்டை இன்ஜின் அரசு தொடர வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

கோவா மாநிலம் தன்னிறைவு பெற இரட்டை இன்ஜின் அரசு தொடர வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

Published on

கோவா மாநிலம் தன்னிறைவு பெற வேண்டுமானால் இப்போது இருப்பதைப் போல இரட்டை இன்ஜின் அரசு தொடர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப்பட்ட ‘ஆத்மநிர்பார் பாரத் ஸ்வயம்பூர்ணா கோவா’ திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

வளர்ச்சிக்கான வழிகள் மற்றும் வாய்ப்புகளை 100 சதவீதம் பயன்படுத்திக் கொண்டால்தான் கோவா மாநிலம் சுயசார்பு (ஸ்வயம்பூர்ணா) அடையும். மாநில பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதுதான் ‘ஸ்வயம்பூர்ணா கோவா’ என்பதன் பொருள்.

நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஆரோக்கியம் மற்றும் வசதி வாய்ப்புகளை உறுதி செய்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். மேலும் இந்த திட்டம் இளைஞர்கள் மற்றும் வேலையில்லாதோருக்கு வேலை வாய்ப்பையும் சுயவேலை வாய்ப்பையும் வழங்கும்.

இந்த திட்டம் வெறும் 5 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகளுக்கானது அல்ல. அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வையின் முதல்கட்டம்தான் இது. இந்த இலக்கை எட்ட ஒவ்வொருவரும் தனது பங்களிப்பை செய்ய வேண்டும்.

எனவே இப்போது நடைபெறுவது போன்ற இரட்டை இன்ஜின் அரசு தொடர வேண்டும். இப்போது இருப்பதைப் போன்ற தெளிவான கொள்கைகளைக் கொண்ட நிலையான அரசும் துடிப்பான தலைமையும் தேவைப்படுகிறது. பொதுமக்களின் நல்லாசியுடன் சுயசார்புடைய மாநிலமாக கோவாவை உருவாக்க முடியும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் பங்கேற்றார்.

இப்போது மத்தியிலும் கோவாவிலும் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதைத் தான் பிரதமர் இரட்டை இன்ஜின் அரசு என்று மறைமுகமாக குறிப்பிட்டார்.

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in