

கரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் 7 நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் இதுவரை 100 கோடி பேருக்கும் அதிகமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், ஸைடஸ் காடிலா, பயலாஜிகல் இ, ஜெனோவா பயோபார்மா மற்றும் பானாசியா பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்நிலையில் இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது அடுத்தகட்ட தடுப்பூசி தயாரிப்புக்கான ஆராய்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு நிறுவனமும் மிகச் சிறப்பாக செயல்பட்டு குறுகிய காலத்தில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட இலக்கு எட்டப்பட்டதை தனித்தனியாக பிரதமர் பாராட்டியதாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் சைரஸ் பூனாவாலா பின்னர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக அக்.21-ம் தேதி அன்று 101.30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இதில் 93 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் ஆகியோரும் உடனிருந்தனர்.
அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகர், கோவா, இமாசலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், லட்சத்தீவுகள், சிக்கிம், உத்ராகண்ட், தாத்ரா நகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.