

பருவமழை இல்லாத காரணத்தால் வேளாண்மை துறை பாதிக்கப் பட்டுள்ள நிலையில், இந்தத் துறைக்கான ஒதுக்கீடு 2 மடங்காக அதிகரிக்கப்பட்டு ரூ.44,485 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடனுதவி சென்றடைவது அவசியம் எனக் கூறிய அருண் ஜெட்லி, கடன் வரம்பை ரூ.9 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்தார். இதுவரை அறிவிக்கப்பட்ட கடன் வரம்பில் இதுதான் அதிகபட்சம். நடப்பு நிதியாண்டில் இத்தொகை 8.5 லட்சம் கோடியாக உள்ளது.
கடன் சுமையைக் குறைக்க, வட்டி சார்ந்த சலுகைகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி தனி யாக ஒதுக்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஒதுக்கீடு நிதி அமைச்சகத்தின் கீழ் வந்தது. தற்போது வேளாண் துறையில் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீடு திட்டத்துக்கு ரூ.5,500 கோடி, பருப்பு உற்பத்தியை அதிகரிக்க ரூ.500 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தித் துறையில் உள்நாட்டு இனங்களை மேம்படுத் துவதற்காக ரூ.850 கோடி மதிப்பில் தேசிய மையம் அமைக்கப்படும்.
வேளாண் துறை சார்ந்த திட்டங்களின் நிதித் தேவைக்காக, வரிக்குட்பட்ட அனைத்து சேவைகளின் மீதும் 0.5 சதவீத கிஸான் கல்யாண் வரி (செஸ்) வரும் ஜூன் முதல் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ள அரசு, வரும் மார்ச் 2017-க்குள் 14 கோடி விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை அட்டையை வழங்கவுள்ளது.
வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதற்காக ஒருங்கிணைந்த வேளாண் சந்தை திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.27 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு, 2019 முதல் 2021-க்குள் இத்திட்டம் முழுமை பெறும்.
80.6 லட்சம் ஹெக்டர்கள் பயனடையும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் 89 பாசனத் திட்டங்களுக்காக ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். நீண்டகால பாசன நிதியம் ரூ.20 ஆயிரம் கோடியில் உருவாக் கப்படும். நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்க ரூ.60 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
மழைநீர் பிடிப்புப் பகுதிகளில் உற்பத்தியை அதிகரிக்க பரம்பரகட் கிரிஷி விகாஷ் காத் திட்டத்துக்காக ரூ.412 கோடி ஒதுக்கப்படும்.
தானிய உற்பத்தியை அதிகரிக்க 622 மாவட்டங்களில் ரூ. 50 கோடியில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
புதிய தொழில்நுட்பத்தில் மண் பரிசோதனை மற்றும் நுண்ணூட்டம் அறிவதற்காக ரூ.368 கோடியில், மண் வள பரிசோதனை மையம் அமைக்கப்படும். விதை பரிசோதனை வசதியுடன் கூடிய 2,000 மாதிரி பரிசோதனை மையங்கள் அடுத்த மூன்றாண்டு களில் அமைக்கப்படும்.
வேளாண் துறை இணை யமைச்சர் சஞ்சீவ் பல்யாண் கூறும்போது, “மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுடன் நல்ல பருவமழை கைகொடுக்க, அடுத்த நிதியாண்டில் வேளாண் துறையின் வளர்ச்சி 4 சதவீதமாக இருக்கும்” என்றார்.
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமி நாதன் கூறும்போது, “இந்த பட்ஜெட் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு விவ சாயத்துக்கு சாதகமாக இருக்க முயன்றுள்ளது” என்றார்.