பெண்ணை கடத்த முயன்ற வழக்கு: ஆந்திர அமைச்சரின் மகன் கைது

பெண்ணை கடத்த முயன்ற வழக்கு: ஆந்திர அமைச்சரின் மகன் கைது
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் சமூக நலம் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சராக ரேவல கிஷோர் குமார் பாபு பதவி வகிக்கிறார். இவரது மகன் சுஷில் (28). இவர் கடந்த வியாழக்கிழமை ஹைதரா பாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஓர் ஆசிரியையை தனது காரில் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆசிரியை புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அமைச்சரின் மகன் சுஷில், அவரது ஓட்டுநர் ரமேஷ் என்கிற அப்பா ராவ் ஆகியோர் மீது நிர்பயா சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட தொலைக் காட்சி சேனல்கள், போலீஸார் இந்த வழக்கை மூடிவிடப் பார்ப்பதாக குற்றம்சாட்டின. மேலும் எதிர்க்கட்சியினரும் அமைச்சரின் மகனை கைது செய்யக் கோரி பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக, போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், சுஷில் நேற்று ஹைதராபாத் போலீஸா ரிடம் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஓட்டுநர் ரமேஷ் என்கிற அப்பா ராவையும் கைது செய்தனர்.

இதுகுறித்து சமூகவலைதளத் தில் பதிவிட்ட சுஷில், ‘‘சாலையில் ஒரு அழகான நாய் குட்டியை கண்டேன். அதை எடுத்து கொஞ் சவே காரில் இருந்து கீழே இறங்கினேன். ஆனால், அந்த பெண் எந்த காரணமும் இல்லாமல் திடீரென கூச்சலிட்டதால், பொதுமக்கள் பிரச்சினையை பெரிதுபடுத்தி விட்டனர்’’ என விளக்கம் அளித்துள்ளார்.

அதே சமயம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேனல்கள் ஒளிபரப்பி இருந்தன. அதில் ஒரு பெண்ணை கார் பின்தொடர்ந்து செல்கிறது. அதை கண்டு அஞ்சியபடி அந்த பெண் வேகமாக நடக்கிறார். அப்போதும் அந்த கார் அவரை விடாமல் பின் தொடர்வது பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in