காஷ்மீரில் அமித் ஷா: அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்; அதிகாரிகளுடன் ஆலோசனை
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ள சூழலில் அங்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் அடுத்தடுத்த அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் பண்டிட் மருந்தாளர் மகான் லால் பிந்த்ரூ, பள்ளி முதல்வர் சுபிந்தர் கவுர், பள்ளி ஆசிரியர் தீபக் சந்த் மற்றும் பிஹாரைச் சேர்ந்த வீரேந்தர் பாஸ்வான் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தீவிரவாதகிள் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து செயல்படும் ‘எதிர்ப்பு முன்னணி’ என்ற தீவிரவாத இயக்கம் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை பயமுறுத்தும் நோக்கத்துடன் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை பயமுறுத்தும் எதிர்ப்பு முன்ணணியை சேர்ந்த தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காஷ்மீர் போலீஸ் பர்வேஷ் அகமது தரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் நவ்காம் கிராமத்திலும் ஆய்வு செய்தார்.
பின்னர் காஷ்மீர் பாதுகாப்பு சூழல் குறித்து உளவுத்துறை, பாதுகாப்புப்படை தலைவர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் கூட்டத்தில் பங்கேற்றார்.
காஷ்மீரில் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு அமித் ஷா செல்வது இதுவே முதல்முறை. அமித் ஷா வருகையையடுத்து ஸ்ரீநகர் ராஜ்பவனில் இருந்து 20 கி.மீ. சுற்றளவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தீவிர கண்காணிப்பு பணிகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.
