

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 666 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் திருத்தியமைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி இந்த பலி எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 326 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.16 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 728 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையில் 2,107 பேர் குறைந்துள்ளனர். தொடர்ந்து 29 நாட்களாக கரோனாவில் புதிதாக தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 53 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 99 பேர் உயிரிழந்தனர். திருத்தியமைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, 292 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9 கோடியே 84 லட்சத்து 31 ஆயிரத்து 162 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 13 லட்சத்து 64 ஆயிரத்து 681 பரிசோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்டுள்ளன.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33 கோடியே 53 லட்சத்து 2 ஆயிரத்து 126 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1.33 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுவரை 101.30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.