

எங்களின் பல சித்தாந்தங்கள் இடதுசாரித் தன்மை கொண்டவை. இந்துத்துவா என்பது வலதுசாரியும் அல்ல, இடதுசாரியும் அல்ல என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் மாதவ் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடந்தது. “இந்துத்துவ முன் உதாரணம்: ஒருங்கிணைந்த மனிதநேயம் மற்றும் மேற்கத்தியமற்ற உலகக் கண்ணோட்டத்திற்கான தேடுதல்” என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே பேசியதாவது:
''இந்த உலகம் இடதுசாரிகள் பக்கம் சென்றது, அல்லது இடதுசாரிகள் பக்கம் செல்வதற்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால், இப்போதுள்ள சூழல், உலகம் வலதுசாரிகள் பக்கம் நோக்கி நகர்கிறது. அதாவது மையப்பகுதியில் இருக்கிறது. இதுதான் இந்துத்துவா. இந்துத்துவா என்பது இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல.
நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன். ஆனால், எங்களின் பயிற்சி முகாம்களில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் நாம் வலதுசாரிகள் என்று கூறியதில்லை. எங்களின் பெரும்பாலான சிந்தனைகள், சித்தாந்தங்கள் இடதுசாரித் தன்மை உடையவை. இருதரப்புச் சிந்தனைகளுக்கும் இடம் வேண்டும், இடது அல்லது வலது என்பவை மனிதர்களின் அனுபவங்கள்தான்.
இந்தியப் பாரம்பரியத்தை யாராலும் நிறுத்த முடியாது. இன்றுள்ள புவி அரசியலுக்கு ஏற்ப அதை இடதுசாரி அல்லது வலதுசாரி என அழைக்கட்டும். புவிசார் அல்லது அரசியல்ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு எனப் பிளவுபட்டுள்ளோம். தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் ஆகியவற்றுக்குப் பின் இந்தக் கிழக்கு, மேற்கு என்பவை மங்கிவிட்டன, ஒளி குறைந்துவிட்டன, உருகிவிட்டன.
மேற்கத்தியம் என்றால் முழுவதும் மேற்கு அல்ல, கிழக்கு என்றால் முழுவதும் கிழக்கு அல்ல. இடதுசாரிகள் என்றால் முழுவதும் இடதுசாரி அல்ல, வலதுசாரி என்றால் முழுவதும் வலதுசாரி அல்ல.
பெர்லின் சுவர் இடிந்தபின் பிளவுபட்ட ஜெர்மன் ஒருங்கிணைந்தது. ரஷ்யா எவ்வாறு ஒருங்கிணைந்தது என்பதுதான் உதாரணம். வலுக்கட்டாயமாக நடக்கும் பிளவுபடுத்துதல், ஒருங்கிணைத்தல் நீண்ட காலத்துக்கு நிலைக்காது, கலாச்சாரம்தான் அடிப்படை''.
இவ்வாறு தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்தார்.