

அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்தாதவர்கள் தப்ப முடியாது என்றும் தம் அரசு அவர்கள் மீது பிடியை இறுக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
அசாம் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 2-வது நாளாக பிரச்ச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ரங்கபாரா தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதாவது:
"மக்கள் பணத்தை சில பணக்காரர்கள் கொள்ளை அடிக்க முந்தைய அரசு உதவி புரிந்துள்ளது. இப்போதைய அரசு அவர்கள் மீது பிடியை இறுக்கி வருகிறது. இத்தகைய கொள்ளைக்காரர்கள் சிறை சென்று விடும் அச்சத்தில் நாட்டை விட்டே ஓடி விட்டனர்.
பணக்காரர்கள் எப்படி மக்கள் பணத்தை கொள்ளையடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் தற்போது நாங்கள் அவர்கள் மீது பிடியை இறுக்கியுள்ளோம். சிறைக்கு செல்லும் அச்சத்தில் வியர்த்து விறுவிறுத்துப் போயுள்ள இவர்கள் நாட்டை விட்டே பறந்து விடுகின்றனர், ஆனால் நான் கூறுகிறேன், ஒருவரும் தப்பி விட முடியாது என்று.
வங்கிகளை ஏமாற்றி இவர்கள் சேர்த்துக் கொண்ட பணம் வங்கிகளுடையது அல்ல, அது நாட்டின் ஏழை மக்கள் பணம். இவ்வாறு வங்கியை ஏமாற்றியவர்கள் ஒரு பைசா பாக்கியில்லாமல் திருப்பிச் செலுத்துவதை நான் உறுதி செய்கிறேன். நாட்டையே அவர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.
நாட்டை இடைத்தரகர்கள் நடத்தி வந்தனர். ஆனால் மோடி ஆட்சியேற்ற பிறகு அவர்கள் தங்கள் கடையை மூடிவிட்டனர். இவர்கள்தான் என்னை அவதூறு செய்கின்றனர், பழிசுமத்துகின்றனர், ஆனால் நான் கவலைப்படப்போவதில்லை. இடைத்தரகர்களுக்கு ‘அச்சே தின்’ கிடையாது, அதனால் அவர்கள் என் மீது பகைமை கொள்வது இயல்பானது.
60 ஆண்டுகளாக ஏழை மக்களைக் கொள்ளை அடித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து விட்டனர். அது இனி நடக்காது. அதனால் மோடியுடன் உங்களுக்கு பிரச்சினை ஏற்படவே செய்யும். நாட்டின் நல்ல நிலைமைகளுக்கும் வளர்ச்சிக்கும் நான் உறுதியளிப்பவனாகிறேன்.
கடந்த 60 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகையில் 40% பேர் வங்கிகளின் கதவுகளைக் கூட சென்றடைந்ததில்லை. ஆனால் ஜன் தன் திட்டத்தின் மூலம் வறியவர்களிலும் வறியவர்கள் கூட வங்கிக் கணக்கு தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தவிர, பணம் கடன் கொடுப்பவர்கள் இதற்கு முன்னர் அதிக வட்டியை வசூலித்து ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி வந்தனர். ஆனால் எங்களது முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் தற்போது குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
இத்தகைய கொள்கைகள் மற்றும் வளர்ச்சிக்கான எங்களது திட்டங்களினால் நம் நாட்டின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. அதனால்தான் நான் தற்போது நான் உலகத் தலைவர்களுடன் கை குலுக்கவும் முடிந்துள்ளது. அவர்கள் மோடியுடன் கைகுலுக்கவில்லை, நம் நாட்டு மக்களுடன் கை குலுக்குகின்றனர்.
இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.