

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் நண்பர் அரூசா ஆலமின் ஐஎஸ்ஐ உடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும் பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் ரந்தாவா அறிவித்துள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை காங்கிரஸ் மேலிடம்நியமித்தது.
அதைத் தொடர்ந்து சில நாட்களில் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் விலகினார். காங்கிரஸ் கட்சியுடன் கருத்துவேறுபாடு காரணமாக எந்தத் தொடர்பும் இன்றி இருக்கிறார், இன்னும் கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகவில்லை.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கிய அமரீந்தர் சிங் கடந்த மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி சென்று சந்தித்தார். இதுஅரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியது. பாஜகவில் அமரீந்தர் சேரப்போகிறார் என்று பேசப்பட்டது. ஆனால், பஞ்சாப் எல்லைப் பிரச்சினை குறித்து அமித் ஷாவுடன் அமரீந்தர் சிங் பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சூழலில் வைத்து புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் எனவும் அவர் அறிவித்தார். இதனை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. பாஜகவுடன் கூட்டணி அறிவித்து தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
இந்தநிலையில் அமரீந்தர் சிங்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் அரசு எடுக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் ரந்தாவா கூறுகையில் ‘‘ பாகிஸ்தானின் பாதுகாப்பு பத்திரிக்கையாளரான அரூசா ஆலம் மூலம் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஐஎஸ்ஐ உடனான தொடர்புகள் குறித்து பஞ்சாப் அரசு விசாரணை நடத்தும்.
கேப்டன் அமரீந்தர் சிங் இப்போது ஐஎஸ்ஐயின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகிறார். அந்த பெண்ணின் தொடர்பை நாங்கள் ஆராய்வோம். கேப்டன் கடந்த 4-5 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் பிரச்சினையை எழுப்பினார்.
கேப்டன் முதலில் ட்ரோன் பிரச்சினையை எழுப்பினார், பின்னர் பஞ்சாபில் பிஎஸ்எஃப் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தை ஆராய டிஜிபியிடம் நாங்கள் கேட்போம்" இவ்வாறு அவர் கூறினார்.