

பண்டிகை காலத்தில் கரோனா போர் ஆயுதங்களை மறந்துவிட வேண்டாம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2021, ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட கரோனாவுக்கு எதிரான வலுவான தடுப்பூசிப் போர், நேற்று (அக்.22 ஆம் தேதி) 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி வரலாற்று மைல்கல்லை எட்டியது.
இதனையொட்டி, இன்று (அக்.22) காலை 10 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது அவர், "100 கோடி கரோனா தடுப்பூசி என்ற மைல்கல் சாதனையை எட்டியுள்ளோம். இதற்கு நிச்சயமாக நாட்டு மக்களின் பங்களிப்பு முக்கியக் காரணம். கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றால் தீபாவளி களை கட்டவில்லை. ஆனால், இப்போது 100 கோடி தடுப்பூசியால் பண்டிகையும் களை கட்டியுள்ளது. பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது.
இருப்பினும் கரோனாவுக்கு எதிரான போர் முழுமையாக ஓயவில்லை. அதனால், கரோனாவுக்கு எதிரான ஆயுதமான முகக்கவசத்தை மக்கள் மறக்க வேண்டாம். சமூக இடைவெளியைக் கடைபிடிப்போம். தடுப்பூசியை செலுத்திக் கொள்வோம். கரோனாவுக்கு எதிராக சிறிய அலட்சியம் கூட காட்டாமல் இருபோம்.
இந்த பண்டிகை காலத்தில் மக்கள் அனைவரும் இந்திய தயாரிப்புகளை வாங்கி மகிழ வேண்டுகிறேன்" என்று கூறினார்.
விஜபி கலாச்சாரம் இல்லை:
மேலும், பிரதமர் பேசுகையில், "2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோவிட்-19 உலகெங்கும் பரவிக்கொண்டிருந்தபோது, இந்தப் பெருந்தொற்றைத் தடுப்பூசிகளின் உதவியுடன் தான் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனவே முன்கூட்டியே நாங்கள் தயாரானோம். நிபுணர் குழுக்களை உருவாக்கி, ஏப்ரல் 2020 முதல் ஒரு செயல்திட்டத்தை தயாரிக்கத் தொடங்கினோம். 2021 ஜனவரியில் இருந்து தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நமது மற்ற திட்டங்களைப் போலவே, தடுப்பூசி இயக்கத்திலும் விஐபி கலாச்சாரம் இல்லை என்பதை அரசு உறுதி செய்தது. கடைக்கோடி மக்களுக்கும் கரோனா தடுப்பூசி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது" என்றார்.