

மது குடித்துவிட்டு வருபவர்களை இரும்புக் கூண்டுக்குள் சிறை வைப்பதை குஜராத் மாநிலம் மோதிபுரா கிராமத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்கள் அந்த சிறையை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் ரூ.2,500 அபராதம் செலுத்த வேண்டும். இதனால் அந்த கிராமத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
குஜராத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் ஆண்களுக்கு குடிப்பழக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக ஒவ்வொரு கிராமத்திலும் மதுப்பழக்கத்தால் கணவனை இழந்த பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் மதுப்பழக்கத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் மோதிபுரா கிராமத்தில் யாரும் மது குடிக்கக் கூடாது என்று சமீபத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதையும் மீறி மது குடித்துவிட்டு ஊருக்குள் வந்தால் அவர்களை இரும்பு கூண்டுக்குள் அடைத்து வைக்கும் புதிய திட்டத்தை அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பாபுநாயக் அறிவித்தார்.
இதையடுத்து அந்த கிராமத்துக்குள் மது குடித்துவிட்டு வந்தஇளைஞர்கள் இரும்புக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர். ரூ.1,200 அபராதத் தொகையை செலுத்திய பிறகே அவர்கள் மறுநாள் காலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த அபராதத் தொகை அந்த கிராமத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மோதிபுரா கிராமத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்துக்கு அருகில் உள்ள கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மேலும் அகமதாபாத், சுரேந்திரன்நகர், அம்ரேலி மற்றும் கட்ச் மாவட்டங்களில் உள்ள24 கிராமங்களில் மது பிரியர்களை இரும்புக் கூண்டுக்குள் அடைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அபராதத் தொகையானது ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இத்திட்டம் குறித்து மோதிபுரா பஞ்சாயத்து தலைவர் பாபு நாயக் கூறியதாவது:
2017-ம் ஆண்டிலேயே இந்தத் திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்தோம். அப்போது அபராதத் தொகையாக ரூ.1,200 வசூலிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். பின்னர் இதை ரூ.2,500-ஆக உயர்த்தினோம் இரவில் கூண்டில் அடைக்கப்படும் நபர்களுக்கு ஒரு குடிநீர் பாட்டில் மட்டுமே தரப்படும். மேலும் இயற்கை உபாதைகளுக்காக ஒரு பெட்டியும் தரப்படும். இந்தத் திட்டத்தால் கிராமத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிராமத்தில் மது குடிப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கிராமத்திலுள்ள நேட் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேஷ் நாயக் கூறும்போது, “இந்த அபராதத் தொகையை சமூக நலத் திட்டங்கள், மத நிகழ்ச்சிகள், சமூகப் பணிகளுக்காக பயன்படுத்துகிறோம். மேலும் கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை, ஏழைப் பெண்களின் திருமணச் செலவுகளுக்கும் வழங்கி வருகிறோம்" என்றார். - பிடிஐ