

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் இலவச விளம்பரம் பெற்றதற்கு பாஜகவே காரணம் என்று அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா கூறியுள்ளது.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாப்பூர்வ இதழான ‘சாம்னா’வில் வெளியான தலையங்கத்தின் விவரம்:
'கண்ணய்யா குமார் இலவச விளம்பரம் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகிறார். அவ்வாறு இருக்குமெனில் அவர் இலவச விளம்பரம் அடைய விட்டதற்கு யார் காரணம்?
உழைக்கும் வர்க்க மக்களும், தொழிலாளர்களும் வங்கால வைப்பு நிதியில் சேமித்து வருகின்றனர். இனி அவர்கள் தங்கள் சேமிப்பை திரும்பப் பெறும்போது வரி செலுத்தியாக வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால் எதையும் இலவசமாக பெறமுடியாது என்பதையே மக்களிடம் அரசு சொல்கிறது.
குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி போராடிய ஹர்திக் படேல், தேசத்துரோக வழக்கில் சிறையில் இருந்து வருகிறார். இதுபோல் கர்னல் புரோகித், சாத்வி பிரக்யா போன்றவர்களும் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வருகின்றனர். பிறகு கண்ணய்யா குமார் எளிதாக ஜாமீன் பெற முடிந்தது எப்படி?
அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதால் அரசுக்கு பிரச்சினை ஏற்படும் என்றால், பல்வேறு கேள்விகளுக்கு அரசு பதில் சொல்லியாக வேண்டும்.
கண்ணய்யா இலவச விளம்பரம் பெற்றுள்ளதாக வெங்கய்ய நாயுடு கூறுவார் எனில் அதற்கு நமது அமைப்பும் நிர்வாகமும்தான் காரணம். கண்ணய்யாவை தாக்கினால் பரிசு என்று சிலர் அறிவித்து அவரை ஹீரோவாக உயர்ந்துவிட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்று அரசு அமைக்க வேண்டும் என்பதே அரசியல்வாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது. தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்து விட்டன. தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்க மக்கள் மற்றும் மாணவர்கள் தற்போது துயருக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலை தொடருமேயானால் நமது நாட்டுக்கு உள்ளேயே மனித வெடிகுண்டுகள் உற்பத்தி செய்யப்படுவார்கள். இந்த இளைஞர்கள் அரசியல் லாபங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவார்கள்' என்று சிவசேனா எச்சரித்துள்ளது.